நவீன இந்தியா உருவானது எப்படி?

சுதந்தரத்துக்குப் பிறகான காலகட்டம் தொடங்கி 1962 வரையிலான காலகட்டத்தை ‘நீண்ட ஐம்பதுகள்’ என்று அழைக்கிறார் கியானேஷ் குடைஸ்யா. India in the 1950s என்னும் அவருடைய புதிய நூல் நீண்ட ஐம்பதுகள் குறித்த ஒரு பருந்துப் பார்வையை அளிப்பதோடு இந்தத் தொடக்ககாலம் எப்படி இந்தியாவின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார அடித்தளத்தைக் கட்டமைத்தது என்பதை விவரிக்கிறது.
பிரிவினை வலியில் தொடங்கி போர் தோல்வியில் முடிவடைந்திருந்தாலும் ஐம்பதுகள் இந்திய வரலாற்றில் முக்கியமானவை. இந்தக் காலகட்டத்தில் இந்தியா பல பாய்ச்சல்களை நிகழ்த்தியிருக்கிறது. அதே சமயம் இன்றவரை நம்மைப் பாதித்துக்கொண்டிருக்கும் பல பிரச்னைகளின் ஆணிவேர் ஐம்பதுகளில் புதைந்திருக்கிறது என்கிறார் நூலாசிரியர். சுதந்தரத்தில் இருந்து தெடங்குவோம். காந்தியையும் காங்கிரஸையும் தொடர்ச்சியாக விமரிசித்துவந்தபோதும் கம்யூனிஸ்டுகள் சுதந்தர விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். பிரிவினை பாதிப்புகளையும் எதிர்கால அச்சங்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றனர் இஸ்லாமியர்கள். டெல்லியில் காங்கிரஸ் கட்சியினரும் முஸ்லிம் லீக் கட்சியினரும் இணைந்தே விழாக்களை ஒருங்கிணைக்க முன்வந்தனர். இது கொண்டாட்டத்திற்கான தருணம் அல்ல என்றார் காந்தி. இந்திய மாதாவைக் கூறுபோட்டுவிட்டு, கொண்டாட்டம் ஒரு கேடா என்று இந்து மகா சபையினரும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் விழாவைப் புறக்கணித்தனர்.
இந்தியா ஓர் இந்து பாகிஸ்தானாக மாறக்கூடாது என்பதில் தொடக்கத்திலிருந்தே உறுதியாக இருந்தார் நேரு. கட்சிக்குயிலேயே அவருக்குப் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. இந்தியாவுக்கு விசுவாசமாக இருப்போம் என்று சொன்னால் மட்டும் போதாது, அதற்காக அத்தாட்சியையும் முஸ்லிம்கள் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் வல்லபபாய் படேல். முஸ்லிம்களை நாம் பணையக் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கவேண்டும்; பாகிஸ்தானில் இந்துக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை நாம் கவனிக்கவேண்டும் என்று வேறு சிலர் ஆலோசனை அளித்தனர். முஸ்லிம்களை நாம் நம்பமுடியாது, அவர்கள் உடனிருந்தே நம்மீது போர் தொடுக்கக்கூடும் என்றும் சிலர் அரசை எச்சரித்தனர். நேரு இத்தகைய குரல்களை அலட்சியம் செய்ததோடு, முஸ்லிம்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவும் திகழ்ந்தார். வேறு வழியின்றி மற்றவர்களும் அவருடன் உடன்பட நேர்ந்தது.
ஆட்சி அமைக்கும் பணிகளிலும் திட்டமிடுதல்களிலும் பிரிவினையின் சாயல் அழுத்தமாகப் படிந்திருந்தது. ஆரம்பத்தில் சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், முஸ்லிம்கள் ஆகியோர் புதிய இந்தியாவில் தங்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்று கோரியிருந்தனர். ஆனால் பிரிவினைக்குப் பிறகு முஸ்லிம்கள் இந்தக் கோரிக்கையைக் கைவிட முடிவெடுத்தனர். புதிய இந்தியாவின்மீதான நம் நம்பிக்கையை வெளிப்படுத்த இது ஒரு வாய்ப்பு என்று அவர்கள் கருதினர். ஆனால் புதிய இந்தியாவோ உருதுவை நம்முடைய தேசிய மொழிகளில் ஒன்றாக வைத்திருக்கத்தான் வேண்டுமா என்று விவாதித்துக்கொண்டிருந்தது. இந்தியே இந்துவின் ‘ராஷ்டிர பாஷாவாக’ இருக்கவேண்டும் என்னும் குரல் வலுவாக ஒலிக்க ஆரம்பித்தது. மொழி ஒரு பெரிய சிக்கலாக இருக்காது என்றுதான் நேருவும் ஆரம்பத்தில் நினைத்தார். ஆனால் மொழிவாரி மாகாணக் கோரிக்கைகள் நாலாபக்கத்திலிருந்தும் கிளம்பிவந்து அவரையும் அவருடைய ஆட்சியையும் கடுமையாக உலுக்கியெடுத்தது. நமக்கு எத்தனையோ முக்கியமான வேலைகள் இருக்க, மொழிப் பிரச்னைக்கு நாம் இவ்வளவு நேரமும் உழைப்பும் செலுத்தத்தான் வேண்டுமா என்று நேரு ஒரு கட்டத்தில் நொந்துகொண்டதும் நடந்தது.
அரசியலமைப்புச் சட்டம் உருவானது ஐம்பதுகளில்தான். யாரை இந்தியக் குடியுரிமையை யாருக்கு வழங்கலாம் என்னும் கேள்வி நீண்ட தொடர் விவாதங்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்ததும் ஐம்பதுகளில்தான். கடும் போராட்டத்துக்குப் பிறகு (நிச்சயம் அகிம்சை வழியில் மட்டுமல்ல, ரத்தமும் சிந்தப்பட்டது), மன்னராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் இந்தியாவோடு இதே காலகட்டத்தில் இணைக்கப்பட்டன. பிரிவினையின்போது இழந்ததைக் காட்டிலும் இந்த இணைப்பின்மூலம் அதிகம் பெற்றுவிட்டோம் என்றார் படேல். ஆனால் காஷ்மிரில் அப்போது வெடித்த சிக்கல் இன்றுவரை நீடிக்கிறது.
மாநில அரசுகள் மத்திய அரசோடு நல்லுறவு கொண்டிருப்பது தேச ஒற்றுமைக்கு அவசியம் என்று நேரு கருதினார். தனது ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் முதல்வர்களுக்கு நேரு 378 கடிதங்களை எழுதியனுப்பினார். பதினாறு தினங்களுக்கு ஒரு கடிதம். திட்டமிட்டு அவ்வாறு செய்யவில்லை என்றாலும் இந்தியக் கூட்டாட்சியைப் பலப்படுத்தியதில் நேருவின் பங்கு முக்கியமானது என்கிறார் நூலாசிரியர். அதே சமயம், தேவைப்படும் சமயங்களிலெல்லாம் தன் அதிகாரத்தையும் ஆளுமையையும் பயன்படுத்தி முதல்வர்களைத் தன் வழிக்குக் கொண்டுவரவும் நேரு தயங்கவில்லை. சுதந்தரம், ஜனநாயகம், கூட்டாட்சி, மக்களாட்சி என்றெல்லாம் பேசிய அதே நேரு, கேரளாவில் கம்யூனிஸ்டுகளின் ஆட்சியைக் கலைக்கவும் செய்தார்.
வகுப்புவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் நேரு இறுதிவரை எதிர்த்தார். இந்து சட்ட மசோதாவைக் கொண்டுவருவதற்குத் தடையாக இருந்த பிற்போக்கு இந்து சக்திகளை விமரிசித்தார். 1952, 1957, 1962 மூன்று தேர்தல்களிலும் முஸ்லிம்களின் பக்கமே நேரு நின்றார். 1952 தேர்தலில் வாக்களித்த 180 மில்லியன் பேரில் 20 மில்லியன் பேர் முஸ்லிம்கள். கிட்டத்தட்ட 80 சதவிகிதம் முஸ்லிம்கள் நேருவை ஆதரித்தனர். 1957ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 152 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களில் 131 பேர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் என்கிறார் முஷிருல் ஹசன்.
காங்கிரஸ் கட்சி ஐம்பதுகளில் எதிர்கொண்ட விமரிசனங்களும் எதிர்ப்புகளும் ஜனநாயகத்தைப் பலப்படுத்த உதவின என்கிறார் கியானேஷ். காங்கிரஸில் இருந்து விலகிக்கொண்ட அம்பேத்கர் அக்கட்சியைத் தொடர்ச்சியாக விமரிசித்துவந்தார். தேர்தலில் எதிர்த்துப் போட்டியிடவும் செய்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேரளா, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பலம் பெற்று வளர்ந்தன. ராஜாஜி நேருவின் பொருளாதாரப் பார்வையைக் காட்டமாகத் தாக்கிவந்தார். காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாகத் (காங்கிரஸ் சிஸ்டம் என்று ரஜனி கோத்தாரி இதனை அழைத்தார்) திகழ்ந்த அதே ஐம்பதுகளில் காங்கிரஸுக்கான மாற்றுவெளியும் உருவாக ஆரம்பித்துவிட்டது. 1952 தேர்தலில் காங்கிரஸின் ஓட்டு சதவிகிதம் 68.4. இது 1957ல் 64.9% ஆகக் குறைந்தது, 1962ல் 60.2%.
குறிப்பிட்ட சொல்லைப் பயன்படுத்தவில்லையே தவிர, ஐம்பதுகளில் நேரு மதச்சார்பின்மைக்கான அடித்தளத்தைக் திட்டவட்டமாகக் கட்டமைத்தார். பின்னாளில் காங்கிரஸ் தனது அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக மதச்சார்பின்மையை ஏற்றுக்கொண்டதற்குக் காரணம் நேருவே. பிரிவினைக்குப் பிறகு நம்மோடு இணைந்திருக்கும் முஸ்லிம்களுக்கு நாம் துரோகம் இழைக்கக்கூடாது என்பதில் அம்பேத்கரைப் போலவே நேருவும் உறுதியுடன் இருந்தார்.
முதல்முறையாக மிகப் பெரிய அளவில் நிலச்சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது ஐம்பதுகளில்தான். ஜமீந்தாரிமுறையை ஒழித்த முதல் மாநிலம் உத்தரப் பிரதேசம். 1 ஜூலை 1952 அன்று நேரு தலைமையில் விமரிசையாக இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது. பிற மாநிலங்களிலும் ஜமீந்தாரிமுறை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது. சோஷலிச பாணி பொருளதாரத்தை நோக்கி நேரு திடமாக நகர ஆரம்பித்தது ஐம்பதுகளில்தான். நேருவின் கனவுகளுக்குச் செயல்திட்டம் வகுக்கும் பணியை பி.சி. மஹலநோபிஸ் ஏற்றுக்கொண்டார். இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தைத் தீட்டியவர் இவரே. உணவு உற்பத்தி ஒரு பக்கம், மூலதனப் பொருள்கள் உற்பத்தி மற்றொரு பக்கம், கனரகத் தொழிற்சாலைகள் கட்டமைக்கும் பணி இன்னொரு பக்கம் என்று மிகவும் சவாலான காலகட்டமாக ஐம்பதுகள் திகழ்ந்தது. இதில் குறைபாடுகளும் போதாமைகளும் இருந்தன என்றாலும் பெருமளவில் பொருளாதாரம் முன்னேற்றம் கண்டது. முதல் ஐந்தாண்டு திட்டம் குறிப்பிடத்தக்க மாற்றங்களை எற்படுத்தியது. 16 மில்லியன் ஏக்கர் கூடுதல் நிலத்துக்குப் பாசன வசதி கிடைத்தது. மின் உற்பத்தி 70 சதவிகிதம் உயர்ந்தது. தொழில்துறையிலும் நம்பிக்கையூட்டும் வளர்ச்சியைக் காணமுடிந்தது. ‘விவசாயிகள் இப்போது முன்பைக் காட்டிலும் முன்னேறியிருக்கிறார்கள். கந்தலுக்குப் பதில் நல்ல ஆடைகளை அவர்கள் அணிந்திருக்கிறார்கள். அவர்களுடைய குடியிருப்புகளும் முன்னேறியிருக்கின்றன’ என்று மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் நேரு. ஐம்பதுகளின் கதாநாயகனாக புத்தகம் நெடுகிலும் பளிச்சிடுபவர் அவரே.
திராவிட இயக்கம் பற்றிய இரண்டே கால் பக்க செய்தி நிச்சயம் போதுமானதல்ல என்றால் ‘பிராமணர்களின் மரணத்தைத் தன்னுடைய பிறந்தநாள் சிறப்புப் பரிசாக அளிக்குமாறு தன்னைப் பின்பற்றுபவரைப் பெரியார் கேட்டுக்கொண்டார்’ என்னும் பெரியார் பற்றிய அறிமுகம் நிச்சயம் நியாயமானதல்ல.
நவீன இந்திய அரசியல் வரலாற்றோடு ஏற்கெனவே பரிச்சயமானவர்கள் புதிதாகப் பெற்றுக்கொள்வதற்கு இந்நூலில் எத்தகைய தகவல்கள் இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் இந்தியாவை உருவாக்கிய ஒரு முக்கியமான காலகட்டம் குறித்த ஒட்டுமொத்தப் பார்வையை இந்நூலில் இருந்து நிச்சயம் ஒருவர் பெற்றுக்கொள்ளமுடியும். எளிமையான நடையில் எழுதப்பட்டிருப்பதும், பெட்டிச் செய்திகள், சங்கரின் கேலிச்சித்திரங்கள் ஆகியவற்றைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தியிருப்பதும் வெகுஜன வாசர்களையும் இப்புத்தகத்தை நேர்க்கி ஈர்க்கும் என்று நம்புகிறேன்.
0
India in the 1950s
Gyanesh Kudaisya
Oxford University Press

Comments