முதல் ஜார் மன்னரின் கதை


ரஷ்யாவின் கதை / அத்தியாயம் 4

நான்காம் இவான்
ஜார் மன்னர் என்று தன்னை அழைத்துக்கொண்ட நான்காம் இவானைப் பற்றி வரலாற்றாசிரியர்கள் முரண்பட்ட மதிப்பீடுகளையே அளிக்கிறார்கள். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மட்டுமல்ல ஆட்சி குறித்தும் விரிவாக அறிந்துகொள்ளமுடியாததால் இந்நிலை ஏற்பட்டிருக்கக்கூடும்.  1547 தொடங்கி 1584 வரையிலான இவானின் ஆட்சிக்காலம் ஒரே சமயத்தில் நல்லவிதமாகவும் மோசமாகவும் நினைவுகூரப்படுகிறது. ‘இவான் தி டெரிபிள்என்றே நான்காம் இவான் அழைக்கப்படுகிறார். இதனைக் கொடூர இவான் என்று மொழிபெயர்ப்பதைவிடஅஞ்சத்தக்க இவான்அல்லதுதிகைப்பூட்டும் இவான்என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று சில வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். ஆனால், இவானின் அதீத போர் வெறியையும் எல்லை விரிவாக்க லட்சியங்களையும் பார்க்கும்போது கொடூரமான இவான் என்னும் அடைமொழி அப்படியொன்றும் பொருத்தமற்றதாகத் தெரியவில்லை.

மூன்று வயதிலேயே அரியணை ஏறிவிட்ட நான்காம் இவானை போயர்களின் டூமா பகடைக்காயாகவே நீண்டகாலத்துக்குப் பயன்படுத்திவந்தது. 1547ம் ஆண்டு  இவானுக்கு 16 வயதாகும்போது நிலைமை தலைகீழாகத் திரும்பியது. தன்னை அதுவரை ஆட்டுவித்துவந்த அனைவரையும் இவான் வெற்றிகரமாகத் தன் கைப்பிடிக்குள் கொண்டுவந்தார். அதற்குப் பிறகு இவானை ஒருவராலும் நெருங்கமுடியவில்லை. தொடக்கக்கால அனுபவங்கள் காரணமாகவோ என்னவோ இறுதிவரை போயர்களை இவான் தீவிரமாக வெறுத்து ஒதுக்கினார். அணுகமுடியாத இரும்பு மனிதராகவும் கடினமான ஆளுமை கொண்டவராகவும் தன்னை அவர் வளர்த்தெடுத்துக்கொண்டார்.

அதே சமயம், திறமை வாய்ந்த ஆலோசகர்களையும் அறிவுக்கூர்மை பெற்ற நிபுணர்களையும் தனக்கருகில் வைத்துக்கொள்ள இவான் தயங்கவில்லை. அவர்களுடைய ஆலோசனைகளையும்  வழிகாட்டுதலையும் பெற்றுக்கொள்வதிலும் அவருக்கு எந்தவித மனத்தடையும் இருக்கவில்லை. நிர்வாகம், சட்டத் துறை, ராணுவம் ஆகியவற்றில் பல மாற்றங்களை இவான் கொண்டுவந்தார். ஆட்சிக்கு வந்த 16வது வயதிலேயே அனாஸ்தாஷியா ரொமனோவ்னா என்பவரை இவான் திருமணம் செய்துகொண்டார். ரஷ்யாவின் முதல் ஜார் மகாராணி இவரே. 

சீஸர் என்னும் ரோமானியச் சொல்லிலிருந்து பெறப்பட்ட ரஷ்யச் சொல் ஜார். ரஷ்யா முழுவதற்குமான ஆட்சியாளர் ஜார் மன்னர் என்று அழைக்கப்பட்டார். அவருடைய மனைவி ஜாரினா அல்லது ஜாரிஸ்தா. அவர்களுடைய மகன், ஜாரிவிச். மகள், ஜாரிவ்னா. ரஷ்யப் பேரரசருக்கு அல்ல,  பைசாண்டிய அரசருக்கே முதலில் ஜார் என்னும் பட்டப்பெயர் வழங்கப்பட்டது. ஆனால் அந்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு ஜார் என்னும் சொல்லை ரஷ்யா கையாளத் தொடங்கியது. மூன்றாம் இவான் சோஃபியா என்பவரை மணம் செய்துகொண்டபோது அவருடன் சேர்த்து பைசாண்டிய கலாசாரமும் ரஷ்யாவுக்குள் நுழைந்ததாகச் சொல்லப்படுகிறது. அதிகாரபூர்வமாக ஜார் என்னும் பட்டத்தைச் சூட்டிக்கொண்டவர் நான்காம் இவான். வெறும் அலங்காரப் பட்டமாக இது இருந்துவிடக்கூடாது என்னும் தெளிவு தொடக்கத்திலிருந்தே இவானிடம் இருந்தது.

1552ம் ஆண்டு கஸான் நகரத்தின்மீது போர் தொடுத்தார் நான்காம் இவான். ரஷ்யாவின் நிலப்பிரதேசத்தை அதிகரிப்பது மட்டுமல்ல இதன் நோக்கம். அங்கே ஆட்சி செய்துவந்த துருக்கிய டாட்டர் வம்சத்தைச் சேர்ந்த கானின் ஆட்சியை இவான் வீழ்த்த விரும்பினார். ரஷ்யாவை ஆக்கிரமித்த மங்கோலியர்களின் படைகளில் டாட்டர்கள் இடம்பெற்றிருந்தனர் என்பதும் அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதும் இவானின் ஆக்கிரமிப்பு நோக்கத்தை விரிவுபடுத்துகின்றன. ஆசாரமான கிறிஸ்தவத்தை உயர்த்திப் பிடித்த இவான் கஸான்மீது தொடுத்த போரைப் பல வரலாற்றாசிரியர்கள் இஸ்லாத்தின்மீதான கிறிஸ்தவத்தின் போராகப் பார்க்க முனைவது அதனால்தான். கொடூரமான முறையில் கஸான் படை வீரர்களும் சிவிலியன்களும் இவானின் படைகளால் துன்புறுத்தப்பட்டனர். திறந்தவெளியில் இரக்கமின்றி படுகொலைகள் அரங்கேற்றப்பட்டனபெண்களும் குழந்தைகளும் பரிசுப் பொருள்களாகக் கவர்ந்துசெல்லப்பட்டனர். ஏராளமான செல்வம் கொள்ளையடிக்கப்பட்டது. தன் வெற்றியைக் கொண்டாட மாஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் புனித பாஸில் தேவாலயத்தை எழுப்பினார் இவான்.

ராணுவ வரலாற்றாசிரியர்கள் கஸான் வெற்றியை விரிவாக ஆராய்ந்திருக்கிறார்கள். தடுப்பரண்களையும் முற்றுகைக் கட்டுமானங்களையும் உருவாக்கியது, சுற்றி வளைத்துத் தாக்குதல் தொடுத்தது, கஸான் நகரின் குடிநீர் குழாய்களைத் தகர்த்து மக்களைத் தவிக்கவிட்டது, வெடிப்பொருள்களைப் பயன்படுத்தியது போன்ற புதுமையான உபாயங்களை இவான் இந்தப் போரில் கையாண்டிருந்தார். பொறியியல்ரீதியிலும் ராணுவத் தந்திர ரீதியிலும் இத்தகைய முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை என்கிறார்கள் அவர்கள். நான்காம் இவானின் ஆட்சியில் ரஷ்ய ராணுவம் நவீன வளர்ச்சியை அடைந்திருந்ததற்கான சான்றாக இந்தத் தாக்குதலை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதுபோக, கஸான் ஆக்கிரமிப்பு மேலும் இரண்டு காரணங்களுக்காக முக்கியமானது. ஒன்று, பைபீரியாவுக்கான வழியை கஸான் திறந்துவிட்டது. இரண்டாவதாக கஸானைத் தோற்கடித்ததன்மூலம் மங்கோலியர்களின் பிடியில் இருந்த ஒரு நகரத்தை முதல்முதலில் தோற்கடித்த பெருமை இவானுக்குக் கிடைத்தது. ரஷ்யாவை ஆக்கிரமித்த மங்கோலியாவைப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்பட்டது.

இதைவிட முக்கியமான சமூக மாற்றத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியாகவேண்டும். கஸான் மக்களை மட்டுமல்ல, துருக்கியர்கள், பின்லாந்து பாகன்கள், சைபீரிய இனக்குழுக்கள் ஆகியோரையும் மாஸ்கோவின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தார் நான்காம் இவான். அவர் ஆட்சிக்கு வந்தபோது ரஷ்ய மொழி பேசும் கிறிஸ்தவர்களே பெருமளவில் ரஷ்யாவின் குடிமக்களாக இருந்தனர். இவானின் ஆக்கிரமிப்புகள்மூலம் துருக்கியர்கள், இஸ்லாமியர்கள், பழங்குடி மக்கள் என்று பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மக்கள்கூட்டம் கொண்ட நாடாக ரஷ்யா மலர்ந்ததுஇதைச் செல்வாக்குமிக்க ரஷ்ய உயர்குடிகளும் எதிர்க்கவில்லை என்பது முக்கியமானது. ஆனால் ஒரே ஒரு நிபந்தனையுடன் இந்தஅந்நியர்கள்ரஷ்ய மண்ணில் ஏற்றுக்கொண்டனர். நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருந்துகொள்ளுங்கள், ஆனால் உங்கள் மதம் இனி கிறிஸ்தவமாக இருக்கவேண்டும், அவ்வளவுதான். இஸ்லாமியர்கள் இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு மதம் மாறினர். மதமாற்றத்துக்குப் பிறகு அனைத்து கிறிஸ்தவர்களையும் ஒன்றுபோல் நடத்தியது ரஷ்ய சமூகம். இதற்கு அத்தாட்சியாக, புதிதாக மதம் மாறியர்களும் ரஷ்ய அரசு நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்பட்டதைக் குறிப்பிடமுடியும்.

1554ம் ஆண்டு அஸ்ட்ராகான் கைப்பற்றப்பட்டது. அடுத்து கிரீமியாதான் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் லிவோனியாவை ஆக்கிரமிக்கத் துடித்தார் இவான். ஆனால் லிவோனியாவின் அண்டை நாடுகளான ஸ்வீடன், டென்மார்க், போலந்து-லித்துவேனியா ஆகியவை லிவோனியாவை ரஷ்யாவின் கரங்களில் ஒப்படைத்துவிட விரும்பவில்லை. எனவே கடும் எதிர்ப்புகளை இவான் சந்திக்கவேண்டியிருந்தது. பால்டிக் நாடுகளில் யாருடைய செல்வாக்கு உயர்ந்திருக்கவேண்டும் என்னும் கேள்வியை இந்த மோதல் எழுப்பியது. அடுத்த 150 ஆண்டுகளுக்கு இந்தக் கேள்வியை முன்வைத்து பல்வேறு மோதல்கள் நடைபெறுவதற்கு இவானின் ஆக்கிரமிப்பு முயற்சி காரணமாக இருந்தது. தீவிரமாகத்தான் முயன்றார். இருந்தும் இறுதிவரை லிவோனியா அவருக்குக் கிடைக்கவேயில்லை. தோல்விகள் மட்டுமல்ல, நோய்களும் நான்காம் இவானைத் துரத்த ஆரம்பித்தன.

சில வெற்றிகளின் உந்துதலின்பேரில் இவான் மேலும் மேலும் ஆக்கிரமிப்புப் போரை விரிவுபடுத்தியது அவரையும் அவர் நாட்டையும் வெகுவாகப் பாதித்தது. இவானின் அர்த்தமற்ற போர்கள் ரஷ்யாவின் பொருளாதாரத்தைப் பின்னுக்குத் தள்ளியது. தன்னுடைய பிரதேச விரிவாக்கக் கனவுக்காக அவர் அண்டைநாட்டு மக்களை மட்டுமல்ல தன் நாட்டையும் சேர்தே துயரத்துக்குள்ளாகினார். பல்லாயிரக்கணக்கான ரஷ்யர்கள் கொல்லப்பட்டனர். லிவோனியாவைத் தேடிச் செல்லும் முயற்சியில் தோல்வியடைந்தோடு பால்டிக் பிரதேசத்தில் ரஷ்யாவின் அதிகாரத்துக்கு உட்பட்டிருந்த இவான்கோரோட் என்னும் பகுதியை ஸ்வீடனிடம் இழந்தார். 1584ம் ஆண்டு கடும் அதிருப்திகளுடன் நான்காம் இவான் இறந்துபோனார்.

பிரச்னைகளின் காலகட்டம்

200 ஆண்டு கால உழைப்பில் வளர்ந்திருந்த மாஸ்கோ நான்காம் இவான் மரணடைந்து 15 ஆண்டுகள் முடிவடைவதற்குள் சரியத் தொடங்கிவிட்டது. அதற்குப் பிறகு 1613ம் ஆண்டு ஒரு புதிய வம்சம் ஆட்சியைக் கைப்பற்றும்வரை ரஷ்யாவில்பிரச்னைகளின் காலகட்டம்நீடித்தது. உள்நாட்டுக் கலகம் வெடித்தது. பிறகு உள்நாட்டுப் போர். நான்காம் இவான் போன்ற ஒரு வலுவான ஆட்சியாளர் இல்லாததால் பலவீனமடைந்திருந்த ரஷ்யாவை அண்டை நாடுகள் ஆர்வத்துடன் ஆக்கிரமிக்க முனைந்தன. மாஸ்கோ முற்றிலும் வலுவிழந்து போனது. சமூகக் கொந்தளிப்புகளும் வன்முறை கிளர்ச்சிகளும் ஆங்காங்கே அதிகரித்தன. மையப்படுத்தப்பட்ட தலைமையின் தோல்வியும் கடுமையான சுரண்டல்முறையுடன்கூடிய நிலப்பிரபுத்துவமும் வன்முறை கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டன.

இறப்பதற்கு முன்பு நான்காம் இவான் இழைத்த ஒரு தீங்கு நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. தன்னுடைய அரசு வாரிசாக வந்திருக்கவேண்டிய மூத்த மகன் இவான் இவானோவிச்சை ஏதோ கோபத்தில் ஒருநாள் இவான் கொன்றுவிட்டார். கர்ப்பமாக இருந்த அவர் மனைவி இந்த அதிர்ச்சி தாங்காமல் இறந்துவிட்டார். சரி, இவானின் மற்றொரு மகனுக்கு ஆட்சியை அளிக்கலாம் என்றால் அவருக்குப் புத்தி பேதலித்திருந்தது. ஏழாவது மனைவிக்குப் பிறந்த மகனான திமித்ரியை அழைக்கலாம் என்றால் அந்த மனைவி சட்டபூர்வமானவரா, அவருக்குப் பிறந்தவருக்குப் பதவி அளிக்கலாமா போன்ற கேள்விகள் பிறந்தன. இறுதியில் வேறு வழியின்றி புத்தி பேதலித்த ஃபியோடரிடமே ஆட்சியை அளித்தார்கள். பிறரிடம் உதவி பெற்று அவர் நிர்வாகத்தை நடத்துவார் என்று சொல்லப்பட்டது.  இதற்கிடையில் திமித்ரியும் மர்மமான முறையில் இறந்துபோனார். அதற்குப் பிறகு அதிகாரப் போட்டி பகிரங்கமானது. உறவினர்கள், உறவினர்களின் நண்பர்கள், நண்பர்களின் உறவினர்கள் என்று பலரும் பல்வேறு சூழ்ச்சித் திட்டங்களுடன் தங்களுக்குள் அடித்துக்கொள்ள ஆரம்பித்தனர்.  மர்ம மரணங்கள் தொடர்ந்தன. ஆட்சியாளர் மட்டும் கிடைக்கவேயில்லை.

1601- 03 ஆண்டுகளில் ரஷ்யா மிகக் கடுமையான பஞ்சத்தை எதிர்கொண்டது. மொத்தம் இருபது லட்சம் பேர் உயிரிழந்தனர். இது ரஷ்யாவின் அப்போதைய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு. பசியுடன் சண்டையிட்டுக்கொண்டிருக்கும்போதே எதிரிகள் இன்னொரு பக்கத்திலிருந்து தாக்கத் தொடங்கினார்கள். ரஷ்யாவை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் போலந்து- லித்துவேனியா தீவிரமாக இறங்கியது. பேச்சுவார்த்தை, உடன்படிக்கை எதற்கும் முன்வராத போலந்து மன்னர் ரஷ்யாவைத் தோற்கடிப்பதிலும் அந்நாட்டை ஒரு ரோமன் கத்தோலிக்க நாடாக மாற்றுவதிலும்தான் ஆர்வமாக இருந்தார்.

ரஷ்யர்கள் குறித்து மட்டுமல்ல ரஷ்யாவின் இறையாண்மையை  அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிக்கொண்டிருந்த ஆக்கிரமிப்புகளைப் பற்றிகூட அரண்மனை கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தெற்கில் எல்லைப்புறப் பகுதிகளில் டாட்டர்கள் தாக்குதலை ஆரம்பித்தனர். மாஸ்கோவின் இதயப் பகுதியிலும் ஸ்மோல்னெஸ்கிலும் போலந்து படைகள் ஊடுருவிக்கொண்டிருந்தன. 1611ம் ஆண்டு போலந்தோடு ஜெர்மானியக் கூலிப்படைகளும் இணைந்துகொண்டன. மாஸ்கோவில் ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு அந்நகரமும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. அழிவுகள் மேலும் தொடர்ந்தன. அராஜகவாதம் நாடு முழுக்கக் கோலோச்சிக்கொண்டிருந்தது.

ஆட்சியாளர்களை நம்பியிருப்பது வீண் என்பதை மக்கள் உணர்ந்தனர். பஞ்சத்தை மட்டுமல்ல, அந்நிய ஆக்கிரமிப்பையும்கூட  அவர்கள்தான் தங்கள் கரங்களில் எடுத்துக்கொள்ளவேண்டியிருந்தது. மங்கோலியர்களை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்ததைப் போல் இந்தமுறையும் ரஷ்யர்கள் அந்நியர்களுக்கு எதிராகத் திரண்டனர். அந்நிய எதிர்ப்பாக மட்டுமின்றி, அந்நிய மத எதிர்ப்பாகவும் இது அமைந்ததால் தேவாலயமும் மக்களுடன் கைகோர்த்துக்கொண்டது. தங்கள் நாட்டுக்காகவும் மதத்துக்காகவும் ரஷ்யர்கள் செப்டெம்பர் 1611ல் தேச மீட்டெடுப்புப் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.

நிஷ்னி-நோவ்கோரோட் வணிகரான குஸ்மா மினின் என்பவர் இதற்குத் தலைமை வகித்தார். இறைச்சி விற்பனையில் வெற்றிகரமாக ஈடுபட்டுவந்த மினின், தேசபக்தி கொண்டவராகவும் இருந்ததால் மக்களின் போராட்டத்தில் கலந்துகொண்டார். போர் செலவுகளுக்கான நிதி வசூல் தொடங்கி போர்க்களத்தில் முன்னிலை வகிப்பது தொடங்கி அனைத்திலும் பேரார்வத்துடன் கலந்துகொண்டார் இவர். மக்களும் இவரை நம்பினார்கள். ரூரிக் வம்சத்து இளவரசரான திமித்ரி போழார்ஸ்கி என்பவர் மினினுடன் கரம் கோர்த்துக்கொண்டார். திறமை வாய்ந்த ஓர் அரசியல் தலைவராக இருந்ததோடு தன்னார்வத்துடன் போரிட வந்தவர்களை ஒருங்கிணைத்துப் போர் வியூகங்கள் அமைப்பதிலும் திறமைசாலியாக இருந்தார் இந்த இளவரசர். இவர் ஏற்கெனவே மாஸ்கோவில் போலந்து வீரர்களை எதிர்த்துப் போரிட்டு, காயமடைந்தவர். இந்த முறை  போலந்தை எதிர்க்கும் படைகளுக்கு இவரே தலைமை வகித்தார்.

ரஷ்ய மக்கள் படையில் பின்லாந்து மக்களும் டாட்டர்களும் பழங்குடிகளும்கூட கரம் கோர்த்திருந்தனர். 22 அக்டோபர் 1612 அன்று அந்நியர்கள் பின்வாங்க நேரிட்டது. தேசிய ஒற்றுமை தினம் என்னும் பெயரில் ஒவ்வோராண்டும் நவம்பர் 4ம் தேதியை சுதந்தர தினமாகக் கொண்டாட ஆரம்பித்தது ரஷ்யா. ரஷ்யப் புரட்சி நடைபெறும்வரை இந்த வழக்கம் தொடர்ந்தது.

உலக வரலாற்றில் 17ம் நூற்றாண்டு ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கிவைத்தது. பூர்ஷ்வா பொருளாதார உற்பத்திமுறையை உலகம் வேகவேகமாகத் தழுவிக்கொண்டிருந்த சமயம்  அது. 16ம் நூற்றாண்டு இறுதியில் நெதர்லாந்தில் ஏற்பட்ட புரட்சியும் 17ம் நூற்றாண்டு மத்தியில் இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழில்புரட்சியும் ஏற்படுத்திய மாற்றம் இது. தொழில்முறை சமூகங்கள் ஐரோப்பாவில் துரிதமாக  உருவாகிக்கொண்டிருந்தபோது மத்திய ரஷ்யாவில் நிலப்பிரபுத்துவம் இன்னமும் அதிக பலத்துடன் இருந்தது. அதே சமயம் தொழில்மயமாக்கலின் தாக்கத்தையும் காணமுடிந்தது. சோவியத் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவதைப் போல், புதிய ரஷ்யா பிறந்துகொண்டிருந்தது. அதே சமயம், பழைய ரஷ்யா முன்பைவிட கூடுதல் பலத்துடன் உயர்த்திருந்தது.


நான்காம் இவானின் சகாப்தம் வேறொரு வகையில் தொடர்ந்தது. அவருடைய மனைவி அனாஸ்தாஷியாவின் வழிவந்த ரோமனோவ் வம்சத்தினர் ரஷ்யாவை ஆளத் தொடங்கினார்கள். இந்த வம்சத்தைச் சேர்ந்த கடைசி ஜார் மன்னரையே ரஷ்யப் புரட்சி வீழ்த்தியது.

Comments