மகா பீட்டரும் நவீன ரஷ்யாவும்

மகா பீட்டர்


ரஷ்யாவின் கதை  /அத்தியாயம் 5

1613ம் ஆண்டு 16 வயது மைக்கேல் ஃபெடரோவிச் ரோமனோவ் ரஷ்யாவின் ஆட்சியாளரானார். போலந்தும் ஸ்வீடனும் மாஸ்கோவை அபகரித்துக்கொள்ள முயன்றுகொண்டிருந்த சமயம் அது. மைக்கேலின் அப்பாவே போலந்தின் பிடியில் ஒரு கைதியாகத்தான் இருந்தார். பிறகு பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடத்தி, போலந்து கைதிகளை விடுவித்து அதற்கு ஈடாக மைக்கேலின் அப்பா ஃபிலாரெட்டை விடுவிக்கவேண்டியிருந்தது. அதற்குப் பிறகு மைக்கேல் பவ்யமாக விலகிக்கொள்ள, ஃபிலாரெட் ரஷ்யாவின் ஜார் மன்னரானார். போலந்து, ஸ்வீடன் இரு நாடுகளுடனும் சமசர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, ஸ்மோலென்ஸ்க் பகுதியை போலந்துக்கு விட்டுக்கொடுப்பதில் ரஷ்யாவுக்கு மிகுந்த மனவருத்தம்தான். ஆனால் கொந்தளித்துக்கொண்டிருந்த ரஷ்யாவைக் கட்டுக்குள் கொண்டுவரவேண்டுமென்றால் போர் தவிர்க்கப்பட்டாகவேண்டும் என்னும் யதார்த்தத்தை ரஷ்யா ஏற்றுக்கொள்ளவேண்டியிருந்தது.

மேற்கத்திய நாடுகளுடனான உறவை ரஷ்யா வளர்த்துக்கொண்டிருந்தது. இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் ரஷ்யாவுக்கு 20,000 ரூபிள் கடன் அளித்தார். போலந்துடன் பேச்சுவார்த்தை நடத்த புனித ரோமப் பேரரசு உதவியது. டானிஷ் அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஜாரின் மகளை மணந்துகொள்ள விருப்பம் தெரிவித்தனர். நிதிச்சுமையைச் சமாளிக்க ஜார் மன்னர் வரி விதிப்பை அதிகப்படுத்தினார். தந்தையின் மரணத்துக்குப் பிறகு மைக்கேல் மீண்டும் ஆட்சியாளரானார். பிரச்னைகளின் காலகட்டம் முடிவடைந்துகொண்டிருந்ததைத் தொடர்ந்து முதல் ரோமனோவ் ஜாரின்கீழ் முடியாட்சி முறை மீண்டும் பலம் பெறத் தொடங்கியது.

அலெக்ஸ் அவருடைய மகன் ஃபியோதர் இருவருடைய ஆட்சிக்காலங்களின்போது ரஷ்யாவின் எல்லை மேலும் விரிவடைந்தது. சிறிய ரஷ்யா என்று அழைக்கப்பட்ட உக்ரேன் ரஷ்யாவின் ஒரு பகுதியானது. போலந்தின் விரோதத்தைச் சம்பாதித்துக்கொண்ட பிறகே இந்த இணைப்பு சாத்தியமானது. மற்றொரு பக்கம், ரஷ்யா ஐரோப்பாவின் தாக்கத்தை உணர்ந்துகொண்டிருந்தது. இதைத் திருச்சபைகள் எதிர்த்தன என்றபோதும் அறிவியல் படைப்புகள் ரஷ்ய மொழிமாற்றம் செய்யப்பட்டன; நாடகங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன. உக்ரேன் வழியாக மேற்கத்திய நாகரிகம் மாஸ்கோவரை ஊடுருவியது. குறிப்பாக கலாசாரத் துறையில் இதை உணரமுடிந்தது. கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டு தனிமைக்குப் பிறகு ரஷ்யாவின் கதவுகள் மிகத் தாராளமாகத் திறக்கப்பட்டன. சில ஆண்டுகள் கழிதது, பீட்டர் ஆட்சிக்கு வந்தபோது இந்தப் பணி ஒரு புதிய பரிணாமத்தை அடைந்தது.

பீட்டர் அல்ல, மகா பீட்டர் என்றே ரஷ்யாவும் உலகமும் அவரை இன்று நினைகூர்கிறது. பதினேழாம் நூற்றாண்டு ரஷ்யாவை பீட்டரின் ரஷ்யா என்று அழைக்கும் அளவுக்கு அவருடைய சிந்தனைகளும் செயல்பாடுகளும் ரஷ்யாவெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. 1672ல் மாஸ்கோவில் பிறந்த பீட்டர் ரஷ்யாவை நவீனமயமாக்கியவராக, ரஷ்யாவின் அடிப்படைப் பண்புகளை அடியோடு மாற்றியமைக்கும் பல முக்கியமான சீர்திருத்தங்களை முன்னெடுத்தவராக அறியப்படுகிறார். பீட்டர் பல முதல்களுக்குச் சொந்தமானவர். ரஷ்ய மற்றும் ஐரோப்பிய மொழிகளில் பீட்டர் என்னும் பெயருடன் ஆட்சி செய்த முதல் மாஸ்கோவிய மன்னர் அவர்தான். முதலாம் பீட்டர் என்பதைக் குறிக்கும் வகையில் தன் பெயரோடு ரோமானிய எண்ணைப் பயன்படுத்திய முதல் மன்னர் அவரே. அவர் அளவுக்கு நிலம், கடல் என்று விரிவாகச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு அந்நியப் பிரதேசங்கள் பலவற்றை நேரில் கண்ட வேறு மன்னர் யாருமில்லை. பேரரசர் என்று பீட்டருக்மக முதலில் அதிகாரபூர்வமாகப் பட்டமளிக்கப்பட்டது. பல விரிவான துறைகளில் ஆர்வம் கொண்டிருந்ததோடு அவையனைத்திலும் தன் முத்திரையை முதலில் பதித்தவர் அவர்தான். நகர்ப்புறக் கட்டுமானங்களைத் தொடங்கிவைத்ததோடு தன் பெயரை அவற்றுக்குச் சூட்டுவதிலும் விருப்பம் கொண்டிருந்த முதல் ரஷ்ய மன்னர் அவரே.

இன்றும்கூட ரஷ்யப் புரட்சிக்கு அடுத்தபடியாக அதிகம் பதிவு செய்யப்பட்ட வரலாற்றுப் பதிவுகள் பீட்டரின் காலகட்டத்தைப் பற்றியதாகவே இருக்கின்றன. அவர் பெயர் இன்றும் விவாதங்களையும் சர்ச்சைகளையும் பல மாறுபட்ட அபிப்பிராயங்களையும் எழுப்பக்கூடியது. பீட்டரை கடவுளாகக் கருதுபவர்களைப் போலவே சாத்தானாகக் கருதுபவர்களின் எண்ணிக்கையும் அதிகம்தான். பீட்டரின் இரக்கமற்ற அணுகுமுறையும் கொடூரமான மனப்போக்கும் பலரால் சுட்டிக்காட்டப்படுகிறது. தன் எதிரிகளையும் தன்னோடு முரண்படுபவர்களையும் அவர் தொடர்ச்சியாக ஒழித்துக்கட்டி வந்தார். பொதுவெளியில் மக்கள் முன்பாகத் தூக்கிடுவது, சிரச்சேதம் செய்வது ஆகிய வழக்கங்கள் பீட்டரின் ஆட்சிக்காலத்தில் நிலவின. இத்தகைய தண்டனைகளை பீட்டர் விரும்பவும் செய்தார். 1682 முதல்  1725 வரையிலான பீட்டரின் ஆட்சிக்காலம் இவையனைத்தின் கலவையாக இருந்தது.

மேற்கத்தியமயமாக்கலின்மீது அசாத்திய நம்பிக்கை கொண்டிருந்தார் பீட்டர். துரிதமாகவும் ரஷ்யா முழுவதிலும் இது நடைபெற்றாகவேண்டும் என்பதில் அவர் கஇறுதிவரை உறுதியாக இருந்தார். நவீனமயமாக்கல், மேற்கத்தியமயமாக்கல் இரண்டும் அவருக்கு ஒன்றே. இல்லை நவீனமயமாக்கலை வேறு வழிகளிலும் சாத்தியப்படுத்தலாம் என்று கருதியவர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ரஷ்யா துரிதமாக ஐரோப்பாவின் வழிகளை ஏற்றுக்கொண்டே தீரவேண்டும். சர்வதேச அரங்கில் ரஷ்யா ஒரு முக்கியமான, செல்வாக்குமிக்க குரலாக இருக்கவேண்டும் என்றும் பீட்டர் துடித்தார். ரஷ்ய ராணுவத்தை நவீனமயமாக்குவதிலும் அதன் வலிமையைப் பிரமாண்டமாக வளர்த்தெடுக்கவும் அவர் தன் நேரத்தை அதிகம் செலவிட்டார். ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தக உறவுகளைப் பலப்படுத்திக்கொள்வதிலும் அக்கறை காட்டினார்.
பீட்டரின் ரஷ்யா

பீட்டரின் சீர்திருத்தங்களில் முக்கியமானவற்றை இப்படித் தொகுத்துக்கொள்ளலாம். மேற்கத்திய மதிப்பீடுகளுக்குத் தக்கவாறு ரஷ்ய ராணுவத்தை மாற்றியமைத்தார்.வலுமிக்க கப்பல் படை உருவாக்கப்பட்டது. பள்ளிகளில் மதச்சார்பற்ற பாடங்கள் போதிக்கப்படவேண்டும் என்று உத்தரவானது. இதன்மூலம் செல்வாக்குமிக்க பழங்கால திருச்சபைகளின் செல்வாக்கை அவரால் கட்டுக்குள் கொண்டுவரமுடிந்தது. அரசு நிர்வாகத்தில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. போயர்களின் டூமா ஒரு பொம்மையாக மாற்றப்பட்டது. டூமாவுக்குப் பதில் பீட்டரின் செனெட் எல்லாவற்றையும் விவாதித்தது, அனைத்து முடிவுகளையும் எடுத்தது. தன்னுடைய விருப்பங்களை அரசு கட்டளைகாக எடுத்துக்கொண்டு முழு முனைப்புடன் செயல்படுபவர்களை மட்டுமே அவர் தன்னருகில் வைத்துக்கொண்டார்.

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியை ரஷ்யா பெறவேண்டும் என்று விரும்பிய பீட்டர் ஐரோப்பிய நிபுணர்களை ரஷ்யாவுக்கு வரவழைத்து அவர்களுடைய ஆலோசனைப் பெற்று பல மாற்றங்களை தன் நாட்டில் ஏற்படுத்தினார்.  அவர்களில் சிலர் இறுதிவரை ரஷ்யாவில் தங்கியிருந்து செயல்பட்டதோடு பீட்டரின் நட்பையும் பெற்றிருந்தனர்.  மருத்துவம், தொழில்நுட்பம், கலாசாரம் என்று பல துறைகள் சார்ந்த அறிவுரைகளை அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார் பீட்டர். மாஸ்கோவில் பெரிய மருத்துவமனைகளும் அறுவை சிகிச்சை மையங்களும் தொடங்கப்பட்டது இப்படித்தான். தாவரவியல் பூங்காக்கள் அமைக்கப்பட்டன.

தனிப்பட்ட முறையில் பீட்டரின் நூலகத்தில் 1,663 நூல்கள் இருந்தன. தனிப்பட்ட சேகரிப்புகளையும் விலை கொடுத்து வாங்கி ஓர் அறிவியல் கூடத்தை அவர் அமைத்தார். அதில் 11,000 நூல்கள் இடம்பெற்றிருந்தன. முதல் அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. பலரும் வந்து பயனடையவேண்டும் என்னும் நோக்கில் நுழைவுக் கட்டணம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இது போதாதென்று வருபவர்களுக்கு தேநீர், காபி தொடங்கி வோட்கா வரை அனைத்தும் இலவசமாக அளிக்கப்பட்டன.  பீட்டருக்கு கிறிஸ்தவ மத நம்பிக்கை இருந்தது. புதிய வேதாகமப்  பிரதிகள் பல அவரிடம் இருந்தன. ஆனால் பழைய ஏற்பாடு ஒரேயொரு பிரதிதான் காணப்பட்டது. இறை நம்பிக்கை கொண்டிருப்பவராக இருந்தாலும் மூடநம்பிக்கைகளை அவர் ஆதரிக்கவில்லை.

டச்சு நாட்டு நிபுணர்களின் உதவியுடன் பதிப்புத் துறை வளர்த்தெடுக்கப்பட்டது. புத்தகங்கள் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டன.  வணிகர்கள் பெருகவேண்டும் என்றும் நடுத்தர பூர்ஷ்வா வர்க்கத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்கவேண்டும் என்றும் பீட்டர் விரும்பினார். கல்வித்துறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன.  மேற்கத்திய நாடுகளில் உள்ளதைப் போன்றே  ரஷ்ய அகரவரிசையை நவீனப்படுத்தினார். அதுவரை  ரஷ்யாவில் நிலவிவந்த கிரிகோரியன் முறை நாள்காட்டியை மாற்றி ஜூலியன் நாள்காட்டியை அறிமுகப்படுத்தினார். ரஷ்யாவின் முதல் செய்தித்தாளையும் அறிமுகப்படுத்தினார். ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் பலன்களும் கண்டுபிடிப்புகளின் பலன்களும் ரஷ்யாவுக்குக் கிடைப்பதை இவ்வாறு உறுதி செய்துகொண்டார் பீட்டர்.

ராணுவப் பணிக்காகப் பத்து வயது சிறுவர்கள்கூட வளைத்துப் பிடிக்கப்பட்டனர். போர் பயிற்சி எடுப்பதற்கு 15 வயது ஆகியிருக்கவேண்டும் என்பதால் 10 வயது சிறுவர்களுக்கு ஐந்தாண்டு காலம் கல்வி போதிக்கப்பட்டு பிறகு ராணுவத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். இதிலிருந்து தப்பியோடிய சிறுவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் கொள்ளைக்கூட்டக்கரர்களாகவும் கருதப்பட்டனர்.  அவர்களை வளர்ப்பதோ ஒளித்து வைப்பதோ குற்றம் என்பதால் பெற்றோர்கள் அவர்களைக் கைவிட நேர்ந்தது.

பீட்டரின்  ஆட்சிக்காலத்தில்  ரஷ்யாவின் எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டன. விரிவடையவும் செய்தன. எஸ்டோனியா, லாட்வியா, ஃபின்லாந்து பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டன. துருக்கியுடன் தொடர்ந்து பகையுணர்ச்சி கொண்டிருந்த பீட்டர் அந்நாட்டுடன் பலமுறை போரிட்டார். ஒட்டமான் துருக்கியுடனான போரை இஸ்லாத்தின்மீதான போராகவே பீட்டர் கருதினர். தன்னை அண்டியுள்ள கிறிஸ்தவர்களை துருக்கியர்களிடமிருந்து மீட்பது தன் கடமை என்று பீட்டர் நம் பினார். ரஷ்யாவிலிருந்து மட்டுமல்ல, ஐரோப்பாவிலிருந்தே துருக்கியர்களை அகற்றுவதுதான் பீட்டரின் விருப்பம். அது சாத்தியப்படவில்லையென்றாலும் கருங்கடலுக்கான பாதை கிடைக்கும் அளவுக்கு துருக்கியர்களுக்கு அவரால் தோல்வியை அளிக்கமுடிந்தது. ஸ்வீடனுடன் போரிட்டு அவர்களை வீழ்த்தினார்.

பீட்டர் மாஸ்கோவை வெறுத்தார். ரஷ்யாவின்  அதிகார பீடமாக மாஸ்கோ திகழ்வதை அவரால் ஏற்கமுடியவில்லை. புதிய தலைநகரை நிர்மாணிக்கும் திட்டம் அவரிடம் இருந்தது. இந்தக் கனவு 1712ம் ஆண்டு நிறைவேறியது. நேவா ஆற்றுக்கு அருகில் புனித பீட்டர்ஸ்பெர்க் கட்டமைக்கப்பட்டது. அதுவே ரஷ்யாவின் தலைநகராகவும் மாறியது. வெகு விரைவில் ஐரோப்பாவின்  ஜன்னல் என்னும் அங்கீகாரத்தைப் புதிய தலைநகரம் பெற்றுவிட்டது.

பீட்டரின் மேற்கத்தியமயமாக்கல் சில எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தியது.  பெரும் பண்ணைகளையும் அவற்றில் பணிபுரிய கொத்தடிமைகளையும் வைத்திருந்த செல்வந்தர்களில் ஒரு பிரிவினர் ஐரோப்பிய மதிப்பீடுகளாலும் அறிவியல் பார்வையாலும் ஈர்க்கப்பட்டு பண்ணைகளைவிட்டு விலகிச் செல்ல ஆரம்பித்தனர். மதிப்பு, அங்கீகாரம் இரண்டையும் வேறு வழிகளில் திரட்டிக்கொள்ளலாம் என்னும் நம்பிக்கைய அவர்கள் இப்போது பெற்றிருந்தனர். ஐரோப்பியர்களைப் போலும் நாங்களும் நாகரிகமானவர்கள் என்று காட்டிக்கொள்ள விரும்பிய இவர்கள் ஒரு தனிப் பிரிவினராகத் திரண்டனர். வாசிப்பு, நாடகம், கலை ஆகியவற்றில் இவர்கள் நாட்டம் சென்றது.  ஒரு புதிய அறிவிஜீவி குழாமாக இவர்கள் உருமாறினார்கள்.

அரசிரின் மதமே மக்களின் மதம்; அரசின் நம்பிக்கையே மக்களின் நம்பிக்கை என்னும் வழக்கமான முடியாட்சி கருத்தாக்கத்திலிருந்து பீட்டர் விலகிநின்றார். கல்விக்கூடங்களில் மத போதனைகள் குறைக்கப்பட்டு அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டன. மதச்சார்பின்மையை வலியுறுத்தும் வகையிலும் கல்வி திருத்தியமைக்கப்பட்டது. இந்தக் கல்வியைப் பெறும் குடிமக்கள் மேலான சிந்தனைகளைப் பெறுவார்கள், மேற்கத்திய சிந்தனைமுறைக்கு மாறுவார்கள் என்பதுதான் பீட்டரின் எதிர்பார்ப்பு.  மத நம்பிக்கையை அவர் எங்கும் வலியுறுத்தாமல் இருந்தது வேறொரு விளைவை மக்களிடையே ஏற்படுத்தியது. வழிவழியாக மக்கள் தங்கள் மன்னரை மதத்தோடு தொடர்புபடுத்தியே அவர்கள் பார்த்துவந்தனர். வலுவான கிறிஸ்தவ நம்பிக்கைகளை வளர்த்து வைத்திருந்த அவர்கள் தங்களுடைய மன்னரும் அதே நம்பிக்கை கொண்டிருப்பவராக விளங்குவதையே விரும்பினர். ஆனால் பீட்டரோ தன்னுடைய நம்பிக்கையை அப்பட்டமான வெளிப்படுத்தவராக இருந்தார்.

இது ஒரு விநோத சிக்கலை ஏற்படுத்தியது. இது கிறிஸ்தவ நாடு; என் மன்னர் கிறிஸ்தவத்தை உயர்த்திப் பிடிப்பவர். எனவே நான் ஒரு ரஷ்யன்; எனவே இது என் தாய் நாடு என்று அவர்கள் ஒருவித தேசிய வரையறையை உருவாக்கிவைத்திருந்தனர். ஆனால் பீட்டரோ மதச்சார்பின்மை, நவீனத்துவம், ஐரோப்பிய மதிப்பீடுகள் என்று பேசிவருகிறார். நவீனமும் அறிவியலும் தொழில்நுட்பமும் கிறிஸ்தவத்துக்கு எதிரானவை அல்லவா? எப்படி  அவற்றை நம்மால் வரவேற்கமுடியும்? மதம்தானே மனிதர்களை இணைக்கும் வலுவான கயிறு? மதச்சார்பின்மையை வைத்து எப்படி ஒரு தேசத்தைக் கட்டமைக்கமுடியும்? இந்த மகா பீட்டர் ஏன் முந்தைய ஜார் மன்னர்களைப் போல் இல்லை? 

Comments