மொழிதான் நம்மை மனிதர்களாக மாற்றுகிறது. மனிதனிடமிருந்து மொழியை அகற்றிவிட்டால் எஞ்சியிருப்பது ‘சரீரம்’ மட்டுமே. மொழியை அகற்றுவது என்பது மனிதனின் ‘ஜீவனை’ அகற்றுவதற்கு ஒப்பானது. விலங்குகளும் தங்களை வெளிப்படுத்திக்கொள்கின்றன என்றாலும் மனிதர்களின் வெளிப்பாடான மொழி மற்ற அனைத்தையும்விட நுணுக்கமானதாகவும் மேம்பட்டதாகவும் இருக்கிறது. பல்லாயிரக்கணக்கானவர்களின் அறிவார்ந்த உழைப்பின் விளைவாகவே மொழி இந்த மேல்நிலையை அடைந்திருக்கிறது.
ஒலிகளால் கட்டமைக்கப்பட்ட மொழியை நாம் பயன்படுத்தத் தொடங்கியது 70,000 ஆண்டுகளுக்கு முன்புதான். நடனமே செய்திப் பரிமாற்றத்தின் தொடக்கம். ஆரம்பத்தில் சைகைகளாலும் உடல் அசைவுகளாலும் மனிதர்கள் உரையாடிக்கொண்டனர். மொழி இல்லை என்னும் குறையைப் போக்க கையை அசைத்தும் உடலை வளைத்தும் கண்களை விரித்தும் இன்னும் பல செய்கைகளிலும் தங்களுடைய உணர்வுகளை மனிதர்கள் பரிமாறிக்கொண்டனர். நீ பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதற்கு அத்தாட்சியாக தலையசைப்பது, கதை கேட்கும்போது உம் கொட்டுவது ஆகியவை இப்போதும் எஞ்சியிருக்கும் பழைய வழக்கங்களே. மொழிகள் நுணுக்கமாக வளர்ந்தபிறகும் இவற்றின் தேவை நீடிக்கிறது. உம் என்னும் ஒலியை, ஒரு சிரிப்பை எந்த மொழியின் பெயரால் அழைக்கமுடியும், சொல்லுங்கள்?
எதிர்காலத்தில் மொழிகளற்ற ஓர் உலகையும் நாம் உருவாக்கக்கூடும். அப்படியொரு உலகை நோக்கியே நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. ஒலிகளை உள்வாங்கி, அந்த ஒலிகளிலிருந்து சொற்களைத் திரட்டிக்கொண்டு, அந்தச் சொற்களை அவற்றுக்கான அர்த்தங்களோடு தொடர்புப்படுத்திப் புரிந்துகொள்வதற்கு மூளை நிறைய ஆற்றலைச் செலவிடவேண்டியிருக்கிறது. உள்வாங்குதல், உணர்தல், புரிதல், நினைவாற்றலை மீட்டல் ஆகியவை சரியாக நிகழ்ந்தால்தால் ஒரு மொழியை நம்மால் பயன்படுத்திக்கொள்ளமுடியும். மொழியின் இடத்தில் படங்களைப் பொருத்திப் பாருங்கள். படங்களைப் புரிந்துகொள்ள இத்தனை ஆற்றலை மூளைச் செலவழிக்கவேண்டியதில்லை. அதனால் எதிர்காலத்தில் மொழிக்குப் பதிலாகத் தொடர்புச் சாதனமாகப் படங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடக்கூடும். இந்த மாற்றம் நாளையே நிகழ்ந்துவிடாது, இன்னும் நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள்கூட ஆகலாம். வாய்மொழியாக மட்டும் உள்ள மொழிகள் முதலில் மரணத்தைச் சந்திக்கும். இது ஏற்கெனவே நிகழ ஆரம்பித்துவிட்டது.
மொழி ஆச்சரியமூட்டும் பல வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து வந்திருக்கிறது. ‘நாளை நாளை அங்கே செல்வேன்’, ‘காஷ்மிரில் இப்போது பெய்யும் பனி, அமெரிக்காவில் போன ஆண்டு இதே சமயம் பெய்ததைக் காட்டிலும் தீவிரமானது’ போன்ற வாக்கியங்களையெல்லாம் தொடக்கத்தில் ஒருவரும் பயன்படுத்தியிருக்கமாட்டார்கள். நிகழ்காலத்தை ஒட்டியே அவர்களுடைய உரையாடல் அமைந்திந்தது. நடைபெறாத நிகழ்வுகளை, எப்போதோ எங்கோ நடந்ததை, இனி நடக்கப்போவதை குறித்தெல்லாம் பேசுவதற்கான சொற்களும் இலக்கணமும் அவர்களிடம் இல்லாமலிருந்தது. மொழி செழுமையடைந்த பிறகு, எப்போதுமே எங்குமே நடந்திராதவற்றைக்கூட நாம் கற்பனை செய்து பேச ஆரம்பித்துவிட்டோம். கதைகளும் கவிதைகளும் பாடல்களும் உருவாக ஆரம்பித்தன.
உலகில் உயிர்ப்புடன் இருக்கும் மொழிகள் எத்தனை என்பதை யுனெஸ்கோ கணக்கிட்டு வருகிறது. ஒரு மொழி ஆரோக்கியமாக இருக்கிறதா, சிதைந்துகொண்டிருக்கிறதா என்பதைக் கண்டறிய அவர்கள் சில கணக்கீடுகளை வைத்திருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை மொழிகளின் தற்கால நிலை, பயன்பாடு ஆகியவை மட்டுமல்ல அவற்றின் எதிர்காலமும் முக்கியம். மொழிகளைப் பாதுகாப்பதும் மக்களைப் பாதுகாப்பதும் வேறல்ல.
ஒரு மொழியை நாம் பாதுகாக்கும்போது அதில் பொதிந்திருக்கும் மக்களின் கூட்டு ஞானத்தையும் சேர்த்தே நாம் பாதுகாக்கிறோம். இன்னொரு தலைமுறைக்கு ஒரு மொழி கடத்திச் செல்வது இந்த ஞானத்தைதான். இந்தக் கடத்தல் தடைபடாமல் இருக்க மொழி அழியாமல் இருப்பது அவசியமாகிறது. எனில் ஒரு மொழியை அழிவிலிருந்து பாதுகாப்பது எப்படி? அதைப் பயன்படுத்தும் மக்களுக்கு வாழ்வாதாரத்தையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும். இதைச் செய்யத் தவறினால் அந்த மக்கள் தங்களுடைய மொழியைக் கைவிட்டுவிட்டு வேறொரு மொழி வளையத்துக்குள் சென்றுவிடுவார்கள். அப்படி அவர்கள் செய்யும்போது அவர்கள் இதுகாறும் பயன்படுத்திவந்த மொழி அழிந்தொழிந்துவிடும்.
என்னுடைய மொழியால் எனக்குப் பயனில்லை, என் மொழிக்கு அங்கீகாரமில்லை, அதற்குச் சந்தை மதிப்பு இல்லை என்று ஒரு குழு உணர்ந்தால் அவர்கள் அந்த மொழியைக் கைவிடத் தயங்கமாட்டார்கள். இது தன்னிச்சையான முடிவாக இருக்கலாம் அல்லது அந்தக் குழுவிலுள்ளவர்களின் கூட்டு முடிவாகவும் இருக்கலாம். என்னுடைய பிழைப்பை உறுதி செய்ய இயலாத ஒரு மொழியை நான் எதற்கு வைத்துக்கொண்டிருக்கவேண்டும் என்றுதான் அவர்கள் கேட்பார்கள். ஒருவருக்கு அவருடைய தாய்மொழியில் கல்வி கிடைக்கவில்லையென்றால் அவரால் தொடர்ச்சியாகக் கற்கமுடியாமல் போகிறது. என் தாய்மொழியில் என்னால் சொல்லமுடிந்த ஒன்றே அதே அழுத்தத்துடன் அதே அர்த்தத்தில் இன்னொரு மொழியில் என்னால் சொல்லமுடியாது. ஒவ்வொருவருக்கும் அவருடைய தாய்மொழி முக்கியமானது.
நாம் அதிகம் இழந்தவை கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களின் மொழிகளைத்தான் என்று நினைக்கிறேன். அதற்குக் காரணம் கடலோர மக்களின் வாழ்வாதாரம் பல்வேறு காரணங்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதுதான். கார்பரேட் உலகம் ஆழ்கடல் மீன்பிடிப்பைத் தீவிரப்படுத்திக்கொண்டிருப்பதால் அதை நம்பியிருக்கும் மக்கள் கடலைவிட்டு விலகிவரவேண்டியிருக்கிறது. அப்போது அவர்கள் தவிர்க்கவியலாதபடி, தங்கள் மொழிகளையும் கைவிட்டுவிடுகிறார்கள்.
நைஜீரியா, இந்தோனேஷியா, பப்புவா நியூ கினி ஆகிய நாடுகளில் பல நூற்றுக்கணக்கான மொழிகள் சமீப காலம்வரை பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. ஆனால் இன்று இவற்றில் பெரும்பகுதி மறைந்துபோய்விட்டது. இந்தியா அந்த அளவுக்கு மோசமில்லை என்றாலும் அழிவிலிருந்து மொழிகளை மீட்டெடுக்கும் பணிகளை இங்கும் நாம் முனைப்புடன் செய்தாகவேண்டும். இந்தியாவில் 1,652 விதமான தாய் மொழிகள் இருந்ததாக 1961ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவு செய்திருக்கிறது. ஆனால் எங்களுடைய பிஎல்எஸ்ஐ மேற்கொண்ட பரப்பாய்வில் 780 தாய் மொழிகளை மட்டுமே அடையாளம் காணமுடிந்தது. இதன் பொருள் மிச்முள்ளவை அனைத்தும் அழிந்துவிட்டன என்பதல்ல. காரணம் மொழிகளை அடையாளம் கண்டு வகைப்படுத்தும்போது பல பிழைகள் நேர்ந்துவிடுகின்றன. வெவ்வேறு இடங்களில் சிற்சில மாற்றங்களுடன் புழக்கத்தில் இருக்கும் ஒரு மொழியைப் பலவாக எண்ணிக்கையில் காட்டும் தவறும் நடந்திருக்கிறது. இதையெல்லாம் கழித்துவிட்டுப் பார்த்தாலும் எப்படியும் 250 மொழிகள் மொத்தமாகக் காணாமல் போயிருக்கின்றன என்றே சொல்வேன். காற்றோடு அவை கலந்துவிட்டன.
என்னுடைய தனிப்பட்ட உபயோகத்துக்காக ஓர் இந்திய வரைபடத்தை எடுத்துக்கொண்டு அதில் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன மொழிகள் பேசப்படுகின்றன என்பதைக் குறிக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் அது இந்திய தேசியக் கொடியைப் போல் எனக்குத் தோற்றமளித்தது. மேலே இந்தோ ஆரிய மொழிக்குடும்பங்களும் கீழே தெற்கில் திராவிட மொழிக் குடும்பங்களும் அழுத்தமான வண்ணத்தில் இடம்பெற்றிருந்தன. இடையில் தேசியக் கொடியில் உள்ளதைப் போன்ற வெள்ளை நிறம். சூரத் முதல் ஹவுரா வரை ஒரு பெரிய கோடு கிழித்து மேலிருந்து நூறு கிமீ, கீழிருந்து நூறு கிமீ உள்ள பகுதிகளைத் தொகுத்துப் பார்த்தேன். கிழக்கு குஜராத், தெற்கு ராஜஸ்தான், தெற்கு மத்தியப் பிரதேசம், வடக்கு மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஆந்திரா உள்ளிட்ட பெரிதும் பழங்குடிகள் வசிக்கும் பிரதேசங்களாக அவை இருந்தன. அதனாலேயே அவர்களுடைய மொழிகள் அதிகம் கவனம் பெறாமலும் இருந்ததைக் கவனித்தேன். அந்த மொழிகளையும் அவற்றை உபயோகிக்கும் மக்களையும் நெருங்கிச் சென்று ஆராயத் தொடங்கினேன்.
மற்றொரு பக்கம், நம்பிக்கையூட்டும் வகையில் சம்தாலி, கோண்டி, பேலி, மிசோ உள்ளிட்ட மொழிகள் செழிப்படைந்து வளர்வதையும் நான் பார்க்கிறோம். வழிக்கொழிந்து போனதாகக் கருதப்பட்ட போர்சுகீசிய மொழியின் ஒரு வடிவத்தை மகாராஷ்டிராவின் மேற்குக் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். மியான்மரின் பழங்குடி மொழி ஒன்று அந்தமான் நிகோபர் தீவுகளில் பேசப்படுகிறது.
ஒரு முறை, பழங்குடிகளின் மொழியில் நான் கொண்டுவரும் இதழ் ஒன்றை ஒரு பெட்டியில் போட்டு ஒரு குக்கிராமத்துக்கு எடுத்துச் சென்றிருந்தேன். இயன்றவர்கள் 10 ரூயாய் தந்து அந்தப் புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லி ஒரு கூடையை அருகில் வைத்திருந்தேன். இரவு நெருங்குவதற்குள் புத்தகங்கள் அனைத்தும் காலியாகிவிட்டன. கூடையில் சுருண்டும் மடங்கியும் இருந்த ரூபாய் தாள்கள் தட்டுப்பட்டன. அவை உழைக்கும் மக்களிடமிருந்து வந்தவை என்பது வெளிப்படை. இதில் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால் இவர்களில் பெரும்பாலானோருக்கு அவர்கள் மொழியைப் படிக்கத் தெரியாது. இருந்தாலும் வருத்தி உழைத்து சம்பாதித்த பணத்திலிருந்து ஒரு பகுதியைக் கொடுத்து அவர்கள் ஒரு பிரதியை வாங்கிச் சென்றதற்குக் காரணம் ஒன்றுதான். இதிலுள்ளவை என் மொழியின் எழுத்துகள். அதை நான் வாங்கிவைத்துக்கொள்வது எனக்குப் பெருமிதம்.
எதற்காக நமக்குப் பல மொழிகள் தேவைப்படுகின்றன என்பதற்கான எளிய விடை நாம் வெளிப்படுத்தவேண்டிய அனைத்தையும் ஒரே மொழியில் சொல்லிவிடமுடியாது என்பதுதான். நுணுக்கமான, சிக்கலான பலவற்றை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டியிருக்கிறது. பல மொழிகள் இருந்தால்தான் நாம் சொல்ல நினைப்பதைப் பலவிதமாக நம்மை வெளிப்படுத்தமுடியும்.
மொழியில் அரசு குறிக்கீடு இருப்பதை நான் ஏற்கவில்லை. ஆனால் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. ஒற்றை தொடர்பு சாதனம் இருப்பதையே அரசு விரும்புகிறது. அதுவே அவர்களுக்கு வசதியானதாகவும் இருக்கிறது. ஆனால் நமக்குத் தேவை மொழி அல்ல, மொழிகள். பலவிதமான மனிதர்கள் இருக்கவேண்டும் என்பதுபோல் பலவிதமான மொழிகளும் இருக்கவேண்டும். அரசு எந்த மொழியையும் உருவாக்கி அளிக்கவில்லை. அரசால் எந்த மொழியையும் முடிவுக்குக் கொண்டுவரவும் முடியாது. மொழிகளிடமிருந்து அரசு விலகியிருப்பதுதான் நல்லது. மனிதர்கள் இதுவரை உருவாக்கியதிலேயே அதிக ஜனநாயகத்தன்மை கொண்டிருக்கும் ஒரு கட்டமைப்பு மொழிதான். அதனாலேயே அதனை நாம் கூடுதல் கவனத்துடன் பாதுகாக்கவேண்டியிருக்கிறது.
===
குறிப்புகள்
1) மொழியியல், இலக்கிய விமரிசனம், கல்வி என்று பல துறைகளில் தனித்துவமான, காத்திரமான ஆய்வுகளை முன்னெடுத்தவர் கணேஷ் தேவி. After Amnesia, A Nomad called Thief உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ஆங்கிலப் பேராசிரியராக 16 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். என்னைச் சுற்றி ஏராளமான மொழிகள் தொலைந்துபோய் கொண்டிருந்த சமயத்தில் ஆங்கிலம் கற்றுக்கொடுத்து சம்பாதித்துக்கொண்டிருந்தது எனக்குள் குற்றவுணர்வை ஏற்படுத்தியது என்று ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார் கணேஷ் தேவி. மொழிகள்மீதும் மக்கள்மீதும் கொண்டிருந்த நேசம் அவரை ஒரு குறிப்பிடத்தக்க மொழியியல் ஆய்வாளராகவும் செயல்பாட்டாளராகவும் மாற்றியது.
பல்வேறு இந்திய மொழிகளில் வெளிவரும் படைப்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பாஷா ரிஸர்ச் அண்ட் பப்ளிகேஷன் செண்டர் என்னும் அமைப்பைத் தோற்றுவித்து நடத்திவருகிறார். இந்திய மொழியியில் ஆய்வுக்குத் (2010) தலைமை தாங்கியிருக்கிறார். இந்த ஆய்வு நூல் வரிசையை அறிமுகப்படுத்தும் பகுதி The Being of Basha என்னும் தலைப்பில் தனி நூலாக வெளிவந்திருக்கிறது.
ஏராளமான விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். தனக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடெமி விருதைச் சமீபத்தில் திருப்பித் தந்திருக்கிறார். குற்றப்பரம்பரையாகக் கருதப்பட்டுவந்த பழங்குடி மக்களின் மீட்சிக்காக மஹாஸ்வேதா தேவி, லஷ்மண் கெயிக்வாட் ஆகியோரோடு இணைந்து பணியாற்றியிருக்கிறார். நான் காந்தியைக் கண்டதில்லை ஆனால் மஹாஸ்வேதா தேவியிடம் காந்தியின் சாயலைக் காண்கிறேன் என்கிறார் கணேஷ் தேவி. சமீபத்தில் வெளிவந்த இவருடைய நூல், The Crisis Within : On Knowledge and Education in India..
2) சி.பி. ராமசாமி ஐயர் ஃபவுண்டேஷன் நடத்திய ஜி.எஸ். சீனிவாசன் நூற்றாண்டு நினைவு விழாவில் நேற்று கலந்துகொண்டு Language between Diversity and Aphasia என்னும் தலைப்பில் விரிவுரையாற்றினார் கணேஷ் தேவி. மேலே உள்ளது அவருடைய உரையின் முழுமையான மொழியெர்ப்பு அல்ல, அதன் சில பகுதிகள் மட்டுமே. தி இந்து, லைவ் மிண்ட், பிபிசி ஆகியவற்றில் வெளிவந்துள்ள கணேஷ் தேவியின் பேட்டிகள், அவரைப் பற்றிய செய்திக்குறிப்புகள் ஆகியவற்றிலிருந்தும் சில செய்திகளைப் பொருத்தமான இடத்தில் இணைத்திருக்கிறேன்.
3) ஆங்கிலத்தில் கணேஷ் தவே (Ganesh Devy) என்று எழுதப்பட்டாலும் அவருடைய அசல் பெயர் கணேஷ் தேவி என்பதுதான். தேவி என்னும் பெயரில்தான் அறை ஒதுக்கியிருக்கிறோம், அவர் எங்கே என்று சென்னையில் ஒரு தங்குமிடத்தில் அவரைக் கேட்டிருக்கிறார்கள். தவறாக எழுதியிருப்பார்கள் என் பெயர் தேவி அல்ல, தவே என்று அப்போது சமாளித்திருக்கிறார். அதுவே நிலைத்துவிட்டது. சென்னைதான் என் பெயரை மாற்றியமைத்தது என்று புன்னகைக்கிறார் தேவி.

Comments
Post a Comment