ரஷ்யாவின் கதை / அத்தியாயம் 6
மகா பீட்டரும் வால்டேரும் சமகாலத்தவர்கள். ரஷ்யப் பேரரசில் மகா பீட்டர் ஏற்படுத்திய புரட்சிகர மாற்றங்களை வியந்து பாõராட்டுகிறார் வால்டேர். பீட்டரின் வரலாறு நம்மையெல்லாம் வழிநடத்தக்கூடியது என்கிறார் அவர். பிரெஞ்சு மறுமலர்ச்சியின் அடையாளங்களில் ஒருவராகத் திகழ்ந்த வால்டேர் ஒரு தத்துவவியலாளர் மட்டுமல்ல ஒரு வரலாற்று ஆசிரியரும்கூட. நாடகம், கவிதை, கட்டுரை, நாவல் என்று பல துறைகளில் எழுதிக் குவித்தவர். அவர் எழுதிய நூல்கள், பிரசுரங்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டிவிடும். அவற்றில் ஒன்று, மகா பீட்டரின் வாழ்க்கை வரலாறு. பீட்டர்ஸ்பர்குக்கு மட்டுமல்ல ரஷ்யப் பேரரசுக்கே அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர் பீட்டர் என்று தனது நூலில் குறிப்பிடுகிறார் வால்டேர். ஐரோப்பாவும் ரோம சாம்ராஜ்ஜியமும் பெற்ற வெற்றியைவிடப் பெரியது ரஷ்யப் பேரரரசின் வெற்றி என்றும் சிலாகிக்கிறார்.
ரஷ்யாவை நாம் இதுவரை பெரிதாகப் பொருட்படுத்தாமல் இருந்துவிட்டோம், இனியும் இந்நிலை நீடிக்கக்கூடாது என்று கருதியே வால்டேர் அந்நாட்டைக் குறித்து எழுதத் தொடங்கினார். ரஷ்யாமீதான தனது ஆர்வத்தைக் கிட்டத்தட்ட தன் வாழ்நாளின் இறுதிவரை அவரைக் கைவிடவில்லை. ரஷ்யாவை ஆய்வுப்பொருளாக எடுத்துக்கொண்ட நவீன அறிவுஜீவிகளில் வால்டேர் முதன்மையானவர் என்று சொல்லலாம். ஆர்ப்பாட்டமான வரவேற்புடன் முதலாம் பீட்டர் பிரான்ஸுக்கு வருகை தந்தபோது அங்கு வசித்துவந்த வால்டேரின் வயது 17. ‘பின்னாளில் பீட்டரின் வாழ்க்கையை நான் பதிவு செய்வேன் என்று அப்போது அவரோ நானோ நினைத்துப் பார்த்திருக்கவே மாட்டோம்.’
தனது வாரிசு யார் என்பதை ஒவ்வொரு ஜார் மன்னரும் அறிவிக்கவேண்டும் என்று 1722ம் ஆண்டு ஓர் உத்தரவைப் பிறப்பித்தார் முதலாம் பீட்டர். ஆனால் அப்படியொரு வாரிசை அறிவிக்காமலேயே மூன்றாண்டுகளில் இறந்துபோனார் அவர். பீட்டருக்குப் பிறகு நான்கு பெண்கள் அடுத்தடுத்து ஆட்சியாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டனர். முதலாமவர், பீட்டரின் மனைவி முதலாம் காத்தரீன். பிறகு, அன்னா. மூன்றாவதாக, எலிஸபெத். இந்த மூவரிடமும் தனித்த நிர்வாகவியல் பண்புகள் இருந்ததாகத் தெரியவில்லை. முதலாம் காத்தரீன் பெயரளவில் மட்டுமே ஜாரினியாக இருந்தார். உறைந்துபோன நேவா ஆற்றில் ஒரு பனி மாளிகையை உருவாக்கி தன் அரண்மனையில் உள்ள ஒரு கோமாளிக்கு அவர் திருமணம் செய்து வைத்தார். எலிஸபெத் தான் ஒருமுறை பயன்படுத்திய ஆடையை இன்னொருமுறை பயன்படுத்துவதை வெறுத்தவராக அறியப்படுகிறார். இறப்பதற்கு முன்னால் பதினைந்தாயிரம் ஆடைகளை அவர் சேகரித்து வைத்திருந்தார். மொத்தத்தில் 1725 முதல் 1761 வரை ரஷ்யாவை ஆண்டவர்களில் ஒருவரும் பீட்டரின் பண்புகளைக் கொண்டிருக்கவில்லை. அந்தக் குறையைப் போக்கியவர், இரண்டாவது காத்தரீன்.
பீட்டர் ரஷ்யர்களுக்கு உடலை அளித்தார் என்றால் காத்தரீன் ஆன்மாவை வழங்கினார் என்கிறார் ஒரு சமகாலக் கவிஞர். காத்தரீன் அடிப்படையில் ஒரு ஜெர்மானியர். இயற்பெயர் சோஃபி. பிரஷ்ய அரசு குடும்பத்தில் பிறந்தவர். பிரெஞ்சு ஆசிரியர்களிடமிருந்து கல்வி பயின்றார். ஆனால் அதில் பெரியளவில் அவருக்கு ஆர்வம் இருக்கவில்லை. தனது பத்தாவது வயதில் அவர் பீட்டரைச் சந்தித்தார். மகா பீட்டரின் பேரனான இவர் பின்னாளில் மூன்றாம் பீட்டராக முடிசூட்டிக்கொண்டார். காத்தரீனுக் பீட்டரை ஆரம்பத்திலேயே பிடிக்கவில்லை. வெளிறிய நிறத்தில் இருந்த பீட்டரை அவர் வெறுத்தற்கு அந்த வயதிலேயே அவருக்கு ஏற்பட்டிருந்த குடிப் பழக்கமும் ஒரு காரணம். பீட்டரும் ஒரு ஜெர்மானியராகவே இருந்தார். அவருக்கு ரஷ்ய மொழிகூடத் தெரிந்திருக்கவில்லை. இருந்தும் தனது 14வது வயதில் பீட்டரை காத்தரீன் திருமணம் செய்துகொண்டதற்கு பிரகாசமான எதிர்கால வாய்ப்புகளே காரணமாக இருந்தது.
பீட்டர், காத்தரீன் இருவருக்குமே திருமணம் ஒரு தோல்வியாகவே முடிந்தது. அடுத்த பதினெட்டு ஆண்டுகள் இருவரும் இணைந்துதான் இருந்தனர் என்றாலும் அவர்களுடைய பாதைகள் எங்குமே ஒன்றிணையவில்லை. திருமணத்துக்குப் பிறகு தனது கணவனை காத்தரீன் இன்னும் அதிகம் வெறுத்தார். அவருடைய குடிப்பழக்கம் இப்போது தீவிரமடைந்திருந்தது. ரஷ்யாவை அல்ல, பிரஷ்யாவையே அவர் அதிகம் நேசித்து வந்தார். இரண்டாம் பிரெட்ரிக்கை அவர் கண்மூடித்தனமாக வழிபட்டு வந்ததைக் கண்டபோது காத்தரீனுக்கு எரிச்சலே அதிகரித்தது. அடிக்கடி பீட்டர் ஏன் சோகமாக இடிந்துபோய் உட்காரவேண்டும், ஏன் திடீர் திடீரென்று அவர் தன் குணங்களை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று காத்தரீனுக்குப் புரியவில்லை. எப்படிப் பார்த்தாலும் பீட்டர் இயல்பானவராகவே தெரியவில்லை.
காத்தரீனுக்கு ரஷ்யா பிடித்திருந்தது. பீட்டரைப் போலன்றி அவர் தன் நாட்டை விரும்பினார். மீண்டும் பீட்டரைப் போலன்றி அவர் சிந்திக்கக்கூடியவராகவும் புத்திசாலியாகவும் இருந்தார். எந்தவொரு விஷயத்திலும் அவரிடம் ஒரு தெளிவான கருத்து இருந்தது. தன் நிலைப்பாட்டில் உறுதியாக அவரால் நிற்கமுடிந்தது. அதே சமயம், எப்போது எதற்கு யாரிடம் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போகவேண்டும் என்பதையும் அவர் புரிந்து வைத்திருந்தார். சிறு வயதில் படிப்பதில் ஆர்வமற்று இருந்த காத்தரீன் இப்போது நிறைய நூல்களை வாசிக்க ஆரம்பித்திருந்தார். அவர் எதற்கோ தயாராகிக்கொண்டிருக்கிறார் என்று அரண்மனையில் இருப்பவர்கள் யூகித்துவிட்டார்கள். அதனாலேயே அவர்மீது ஒருவித வெறுப்பும் அவர்களுக்கு வந்துவிட்டது.
தொடக்கத்திலிருந்தே பீட்டருக்கும் காத்தரீனுக்கும் இடையில் ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் நிலவிவந்தது. உன் தனிப்பட்ட வாழ்வில் நானும் என் தனிப்பட்ட வாழ்வில் நீயும் தலையிடவேண்டியதில்லை. இதை இருவருமே மதித்தனர். காத்தரீனுக்கு மூன்று காதலர்கள் இருந்தனர். பால் என்றொரு மகன். காத்தரீன் அதிகம் நேசித்தது யாரை? தன் காதலர்களையா? தன் மகனையா? இரண்டுமே இல்லை. அவருடைய கனவு விரிவானதாக இருந்தது. அப்போது ரஷ்யாவை எலிஸபெத் ஆண்டு கொண்டிருந்தார். ஆரவாரத்துடனும் அதிகபட்ச ஆடம்பரத்துடனும் இருபது ஆண்டுகள் அவர் அதிகாரம் நீடித்தது. 1761ம் ஆண்டு எலிஸபெத் மரணமடைந்ததைத் தொடர்ந்து பீட்டர் ஜார் மன்னராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ரஷ்யா பிரஷ்யாவுடன் போரிட்டுக்கொண்டிருந்த சமயம் அது. 1756 முதல் 1763 வரை நீடித்த இந்த ஏழாண்டு போரை பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்பு நடைபெற்ற முக்கியமான போர் என்று சொல்லமுடியும். ரஷ்யா, பிரான்ஸ், ஆஸ்திரியா, ஸ்வீடன், சாக்ஸோனி (சுதந்தர ஜெர்மன் பிரதேசம்) ஆகியவை ஒரு பக்கமும் பிரஷ்யா, ஹானோவர், பிரிட்டிஷ் பேரரசு இன்னொரு பக்கமும் திரண்டு நின்றன. ஐரோப்பாவின் பெரும் சக்திகள் ஒன்றுதிரண்டு மோதிக்கொண்ட இந்தப் போரை அரசு குடும்பங்களுக்கு இடையிலான போர் என்றும் அழைக்கமுடியும். ஆட்சி பிரதேசத்தை விரிவாக்கும் கனவே போருக்கான காரணமாக இருந்தது. அதுவே இந்நாடுகளுக்கு இடையில் பகையுணர்வையும் ஏற்படுத்தியது. 1740 முதல் 1748 வரை நடைபெற்ற மற்றொரு ஐரோப்பியப் போரின்போது ஆஸ்திரியாவிடமிருந்து சிலெசியா என்னும் பகுதியை பிரஷ்யா அபகரித்திருந்தது. ஆஸ்திரியாவின் வளமான பகுதியாக சிலெசியா அறியப்பட்டிருந்தது. இதனை பிரஷ்யாவிடம் இழந்ததை ஆஸ்திரியாவால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. எப்படியாவது மீண்டும் சிலெசியாவைத் திரும்பப்பெறவேண்டும் என்று அந்நாடு துடித்துக்கொண்டிருந்தது. இரண்டாம் பிரெட்ரிக் என்று அழைக்கப்படும் மகா பிரெட்ரிக் அப்போது பிரஷ்யாவை ஆண்டுவந்தார். ஆஸ்திரியாவை ஹாப்ஸ்பர்க் அரச குடும்பத்தினர் ஆண்டுவந்தனர். 15ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டுவரை ஹாப்ஸ்பர்க் வம்சத்தினரே ஜெர்மனியின் செல்வாக்குமிக்க ஆட்சியாளர்களாகத் திகழ்ந்தனர்.
ஆஸ்திரியாவுக்கும் பிரஷ்யாவுக்குமான மோதலில் பிரான்ஸும் பிரிட்டனும் பங்கேற்றதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான பகை ஏற்கெனவே பிரசித்தமானதுதான். ஐரோப்பாவின் பெரும் சக்தியாக யார் திகழவேண்டும் என்பதிலும் யாரிடம் அதிக காலனி நாடுகள் இருக்கவேண்டும் என்பதிலும் தொடர்ச்சியாகப் போட்டி நிலவிவந்தது. அதன் காரணமாக அவ்வப்போது போர்களும் நடைபெறுவதுண்டு. அல்லது ஏதேனும் போர் நடைபெற்றால் அதில் இணைந்துகொண்டு அதையே சாக்கிட்டு மோதிக்கொள்வதும் உண்டு. ஏழாண்டுப் போரில் இந்த இரு நாடுகளும் எதிரெதிர் நின்றதற்கு இந்த நீண்டகால பகையே காரணம். இந்தமுறை வடக்கு ஆப்பிரிக்கா யார் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கவேண்டும் என்னும் கேள்வியை இரு நாடுகளும் எழுப்பிக்கொண்டு மோதிக்கொண்டன. இந்தியாவை முன்னிறுத்தியும் இவர்களுக்கிடையே போட்டி உருவாகியிருந்தது. அந்த வகையில் காலனியாதிக்கத்துக்கான போட்டியாகவும் ஏழாண்டுப் போர் திகழ்ந்தது.
காத்தரீன் எதிர்பார்த்ததுதான் நடந்தது. புதிய ஜார் மன்னரான பீட்டர் முதல் வேலையாக போரிலிருந்து பின்வாங்கினார். அதற்கான காரணம் வெளிப்படையானது. தனது தாய்நாடாக அவர் உண்மையில் கருதியது ரஷ்யாவை அல்ல, ஜெர்மனியை. மேலும், ஜெர்மனியைக் காட்டிலும் தீவிரமாக அவர் ரஷ்யாவை வெறுத்தார். ரஷ்யாவின் மன்னராக இருந்தபோதிலும் தனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை மாற்றிக்கொள்ள அவர் தயாராகயில்லை. திடீரென்று போரிலிருந்து விலகிக்கொண்ட தன்னைக் கண்டு ரஷ்யர்கள் அதிருப்தி அடைந்ததையும் அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. முன்பைவிடவும் அதிகம் தன் கணவரை வெறுக்க ஆரம்பித்தார் காத்தரீன். ஒரு நல்ல கணவராக மட்டுமல்ல ஒரு நல்ல ஆட்சியாளராகவும் பீட்டர் இருக்கமுடியாது என்பதை அவர் அழுத்தமாக உணர்ந்துகொண்டார். இந்நிலை தொடர்வதை அனுமதிக்கக்கூடாது என்று உறுதியாகத் தெரிந்தது. பீட்டரின் மற்ற செய்கைகளும் இப்படித்தான் இருந்தன. அவரைச் சகித்துக்கொள்ள ரஷ்யர்கள் மிகவும் சிரமப்படவேண்டியிருந்தது. கொடூரமான தவறுகளைவிட, அவமானகரமான முட்டாள்தனங்களைச் சகித்துக்கொள்வது அவர்களுக்குப் பெரும்பாடாக இருந்தது. நான் உன்னை, உன் நாட்டை வெறுக்கிறேன் என்று கிட்டத்தட்ட பிரகடனமே செய்துவிட்ட ஓர் மன்னரை என்னதான் செய்யமுடியும்?
அடுத்து பீட்டர் மேற்கொண்ட நடவடிக்கை காத்தரீனை நேரடியாகப் பாதித்தது. தன் மனைவியை முற்றாக விலக்கிவைக்க விரும்பினார் பீட்டர். தனக்கான அவகாசம் வந்துவிட்டதை உணர்ந்தார் காத்தரீன். இதற்காகவே காத்திருந்ததைப் போல் காத்தரீன் மின்னல் வேகத்தில் களத்தில் இறங்கினார். பீட்டரை நேரடியாக மோதி வீழ்த்துவதே அவர் திட்டம். பீட்டர் வீழ்த்தப்பட்ட பிறகு அதிகாரத்தைக் கைப்பற்றுவது அவரது இலக்கு. ஒரு ஜார் மன்னரை வீழ்த்த என்ன தேவை? காத்தரீன் ராணுவத்தின் உதவியைக் கோரி பெற்றுக்கொண்டார். பீட்டருக்கு அல்ல, தனக்கே இனி ராணுவம் கட்டுப்படுமாறு பார்த்துக்கொண்டார். அதற்கு அவருடைய காதலும் உதவிக்கு வந்தது. புனித பீட்டர்ஸ்பர்கில் நிறுத்தப்பட்டிருந்த படைகளை நிர்வகித்த வந்த கிரிகோரி ஓர்லோவ் என்பவர் காத்தரீனின் காதலர்களில் ஒருவராக இருந்தது இப்போது வசதியாகிப் போனது. பிறகு, அரண்மனையின் ஆதரவையும் பெற்றுக்கொண்டார் காத்தரீன். பீட்டரின் தெளிவற்ற, முரண்பட்ட நடவடிக்கைகளால் சோர்வடைந்திருந்த அரண்மனைவாசிகள் துடிதுடிப்பான காத்தரீனை ஒரு நல்ல மாற்றாகப் பார்த்ததில் வியப்பேதுமில்லை.
இதையெல்லாம்விட முக்கியமாக காத்தரீனுக்கு குடிமக்களின் ஆதரவு கிடைத்தது. பழைய தலைநகரமான மாஸ்கோ, புதிய தலைநகரம் புனித பீட்டர்ஸ்பர்க் இரண்டும் காத்தரீனுக்குப் பின்னால் அணிதிரண்டது. ராணுவமும் அரண்மனையும் காத்தரீனை ஆதரித்ததைக் கண்டு பிரபு குலத்தவர்களும் பீட்டரிடமிருந்து விலகி காத்தரீனை அரவணைத்துக்கொண்டனர். காத்தரீனின் ஆளுமை இவர்கள் அனைவரையும் கவர்ந்தது. நிச்சயம் இவர் நம்மைக் கைவிட மாட்டார் என்று அவர்கள் உளப்பூர்வமாக நம்பினார்கள். மகா பீட்டருக்குப் பிறகு சுணக்கம் அடைந்திருந்த ரஷ்யாவை காத்தரீன் வலுப்படுத்தவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். மகா பீட்டரின் ரஷ்யா என்று பெருமிதத்துடன் சொல்லமுடிந்ததைப் போல் காத்தரீனின் ரஷ்யா என்றும் எதிர்காலத்தில் நாம் சொல்லவேண்டும் இல்லையா?

Comments
Post a Comment