ரஷ்யாவின் கதை / அத்தியாயம் 3
மங்கோலியர்களின் பிடியிலிருந்து
ரஷ்யா விடுபட்ட ஆண்டு 1480 என்று
வரலாறு குறித்து வைத்திருக்கிறது.
உக்ரா என்னும் நதிக்கு அருகில்
மூன்றாம் இவானின்
படைகளும் மங்கோலியர்களின் படைகளும் சந்தித்துக்கொண்டன. அகமது
கான் என்பவர் மங்கோலியாவின்
பிரதிநிதியாக மூன்றாம்
இவானை எதிர்கொண்டார். இந்த
அகமது கான் இதற்கு முன்பே 1472ல்
ஒருமுறை மாஸ்கோவைத் தன் பிடிக்குள்
கொண்டுவர முயன்று
தோற்றுப்போயிருந்தார். எட்டாண்டு
இடைவெளியில் அடுத்த முயற்சியை அவர்
மேற்கொண்டிருந்தார். ஆனால் இந்த
முறையும் அவருக்குத்
தோல்வியே கிடைத்தது.
அகமது கான் தோற்றுவிட்டார்
என்றாலும் மூன்றாம்
இவான் வென்றுவிட்டதாகச் சொல்லமுடியாத
நிலை. உண்மையில்
மூன்றாம் இவானை
மாஸ்கோ 1480 போருக்குப்
பிறகு விமரிசிக்கவும்
பரிகசிக்கவும்கூட செய்தது.
மூன்றாம் இவான்
கோழையாகிவிட்டார் என்று
அவர்கள் தூற்றினர்.
அகமது கான், மூன்றாம்
இவான் இருவருமே
தோல்வியாளர்கள் என்றால்
1480 போரை
ஏன் வரலாற்றாசிரியர்கள்
முக்கியமானதாகக் கருதுகிறார்கள்?
அதற்கொரு காரணம்
இருக்கிறது. 1480ம்
ஆண்டு மங்கோலியப் படைகள்,
இவானின் படைகள் இரண்டும்
மோதிக்கொண்டது உண்மை. இரண்டு
படைகளும் ஒன்றையொன்று வெல்லவேண்டும்
என்று துடித்ததும் உண்மை.
மூன்றாம் இவான் வென்றால்
மங்கோலியர்களின் ஆட்சி முடிவுக்கு
வரும். அகமது கானுக்கு
வெற்றி கிடைத்தால் மாஸ்கோவின் அதிகாரத்தை அடக்கியது
போலாகும்; ரஷ்யா
முழுமையான கட்டுப்பாட்டின்கீழ் வருவதும்
சாத்தியப்படும். இப்படி
நினைத்துதான் போரிடத் தொடங்கினார்கள்
என்றாலும் ஒரு கட்டத்துக்குமேல்
இருவரையும் தோல்வி அச்சம்
பிடித்துக்கொண்டுவிட்டது. இவானின்
படைகளைக் கண்டு அஞ்சி
அகமது கானின் படைகளும், மங்கோலியர்களைக்
கண்டு அஞ்சி இவானின்
படைகளும் தப்பியோடிவிட்டன.
அதற்குப் பிறகு
இரு தரப்புக்கும்
இடையில் பேச்சுவார்த்தைகள்
நடைபெற்றன. இதையும்
பாதியில் நிறுத்தவேண்டியிருந்தது.
அகமது கான் மங்கோலியர்களாலேயே கொல்லப்பட
நேர்ந்ததுதான் அதற்குக் காரணம். பிறகு,1502ம்
ஆண்டு கிரீமியாவின்கான் மன்னர்
இவான் செய்யவேண்டியிருந்ததைச்
செய்துமுடித்தார். உட்பகை
காரணமாக அவர் சக
மங்கோலியர்கள் மீதே போரிட்டு
அவர்களை முற்றிலுமாக
அழித்தொழித்தார்.
எப்படியோ ரஷ்யா
இப்போது முழுமையாக
அந்நிய ஆட்சியிலிருந்து
விடுபட்டுவிட்டது.
1480 போரில் இவானுக்கு
வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அவர்
நோக்கம் நிறைவேறிவிட்டது.
மங்கோலியர்களை அகற்றியதில் அவருடைய
பங்கு அதிகமில்லை
என்றாலும் இன்னபிற துறைகளில்
இவான் அமல்படுத்திய மாற்றங்களைக் கருத்தில் கொண்டு
ரஷ்யர்கள் அவரை
மன்னித்து ஏற்றுக்கொண்டனர். அத்துடன்
நில்லாமல் ‘மாமன்னர்
மூன்றாம் இவான்’என்றும் அவரை
அழைக்கத் தொடங்கினர். ‘கிராண்ட்
பிரின்ஸ் ஆஃப்
மாஸ்கோ’ என்று அதுவரை அறியப்பட்டிருந்த
மூன்றாம் இவான்
இப்போது தன் பட்டப் பெயரோடு
மிகச் சுலபமாக இன்னும் ஓர்
அடைமொழியையும் சேர்த்துக்கொண்டார் -
‘ரஷ்யா முழுமைக்குமான
மன்னர்.’
கீவிய
ரஷ்யா, மாஸ்கோவிய
ரஷ்யா, மங்கோலிய
ரஷ்யா என்றெல்லாம் இனி
அழைக்கவேண்டியதில்லை. எந்தப்
பிரதேசம் யாருடைய
கட்டுப்பாட்டின்கீழ் இருக்கிறது என்று ஆராயவேண்டியதில்லை.
எந்த ஆட்சியாளர் பலம்
பொருந்தியவர், எந்தப்
பிரதேசம் இருப்பதிலேயே
பெரியது என்றெல்லாம்
யோசிக்கவேண்டியதில்லை. இனி
ரஷ்யா என்றால் அது
ஒரு பிரதேசத்தை
மட்டுமே குறிக்கும்.
அந்த ரஷ்யா என்பது
மூன்றாம் இவானின்
ரஷ்யா மட்டுமே.
ரஷ்யாவின் ஆட்சியாளர் என்றால்
இனி அவர்
ஒருவர்தான். அல்லது ரஷ்யா என்றால் அவர்தான்.
மூன்றாம் இவானின் வெற்றி
என்பது மாஸ்கோவின் வெற்றி.
இதை ரஷ்யா
மட்டுமல்ல ஐரோப்பாவும்
உணர்ந்திருந்தது. பலமிக்க
ஒரு பேரரசராக
மூன்றாம் இவான்
உயர்ந்திருப்பதை அவர்கள்
அங்கீகரிக்கவேண்டியிருந்தது. இனியும்
உதிரி ஆட்சியாளர்களால்
ஆளப்படும் நாடு
அல்ல ரஷ்யா
என்பதையும் ; இனி ரஷ்யாவுக்கு
மேலதிக மரியாதை
செலுத்தவேண்டும் என்பதையும்
அவர்கள் உணர்ந்துகொண்டனர்.
புனித ரோமப் பேரரசு
ஒரு நல்ல
எடுத்துக்காட்டு. மூன்றாம்
இவானுக்கு ‘அரசர்’
என்னும் அடைமொழிகொடுத்து
அங்கீகரித்த ரோம், அவருடன்
இணைந்து பணியாற்றுவதிலும்
ஆர்வம் செலுத்தியது.
வெனிஸ் குடியரசு,
டென்மார்க், ஜார்ஜியா,
துருக்கி, பெர்ஷியா என்று
பல நாடுகளுடன்
ரஷ்யா வர்க்க
உறவு அல்லது
ராணுவக்கூட்டு வைத்திருந்தது. தோல்
பொருள்கள், கம்பளி, பதப்படுத்தப்பட்ட
இறைச்சி, கொழுப்பு வகைகள்,
வால்ரஸ் தந்தம், மெழுகு,
தேன் உள்ளிட்டவற்றை ரஷ்யா
மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி
செய்தது. இயந்திரங்கள்,
இயந்திர பாகங்கள்,
ஆடைகள் ஆகியவற்றை ரஷ்யா
இறக்குமதி செய்தது.
அயலுறவில் மட்டுமல்ல உள்நாட்டிலும் மூன்றாம் இவான் சில அடிப்படை
மாற்றங்களைக் கொண்டுவந்தார். ஆட்சிமுறை,
நிர்வாகமுறை ஆகியவற்றைச் சீர்திருத்துவதில்
அவர் அக்கறை கொண்டிருந்தார்.
டூமா எனப்படும்
கவுன்சிலில் நிலப்பிரபுக்களின்
பிரதிநிதித்துவம் இருக்குமாறு
அவர் பார்த்துக்கொண்டார். இந்த
டூமாவில் பல்வேறு துறைகள் செயல்படும்.
சிவில் பணியாளர்களின்
எண்ணிக்கையை இவான் அதிகரித்தார்.
இந்த மாற்றங்கள்
சிறப்பான அரசு
நிர்வாகத்துக்கு உதவும் என்பது
அவர் நம்பிக்கை.
நகரங்கள், மாவட்டங்கள்
ஆகியவை அரசு
நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
இந்த நிர்வாகிகளின் அதிகாரம்
கட்டுப்படுத்தப்பட்டது. எந்த
அளவுக்கு இவர்கள்
தன்னிச்சையாகச் செயல்படலாம்
என்பதை இவான் முடிவு
செய்தார். ரஷ்யா என்பது
ஒரே நாடு என்னும்
உணர்வு மக்கள்
அனைவருக்கும் ஏற்படவேண்டும்
என்பதற்காக நீதித் துறையிலும்
ஒரு முக்கிய
மாற்றத்தைக் கொண்டுவந்தார் இவான்.
ரஷ்யா முழுமைக்கும்
இனி ஒரே
சட்டமுறைதான் அமலில்
இருக்கும்.
ரஷ்யாவை ஒருங்கிணைத்தது,
அந்நிய ஆக்கிரமிப்பை
அகற்றியது ஆகியவை போக,
மூன்றாம் இவானின்
முக்கியமான பங்களிப்புகளில்
ஒன்று ரஷ்யாவின்
அரசியல் அடித்தளத்தை உருவாக்கியது
என்கிறார்கள் சோவியத் வரலாற்றாசிரியர்கள்.
அவருடைய கண்டிப்பான அணுகுமுறை,
அசாதாரணமான அரசியல்
தொலைநோக்குப் பார்வை,
புத்திக்கூர்மை ஆகியவற்றையும்
அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ரஷ்யாவை ஒரு
பலம் வாய்ந்த
நாடாக உருவாக்குவதில் மட்டுமல்ல,
சர்வதேச அளவில்
முக்கியமான ஒரு
சக்தியாகவும் மாற்றியதில் இவானுக்கு
முக்கியப் பங்கு
இருக்கிறது. கிறிஸ்தவ
மத நிறுவனத்துக்கும்
நிலப்பிரபுத்துவத்துக்கும் இடையிலான
உறவு பலப்பட்டதும்
இந்தக் காலகட்டத்தில்தான். ரஷ்யாவை
மற்ற ஐரோப்பிய
நாடுகளிடமிருந்து வேறுபடுத்திக்
காட்டும் பண்புகள் பெரும்பாலானவற்றுக்கான
அடித்தளம் 15ம் நூற்றாண்டில்தான்
உருவானது.
சமூகம்
மங்கோலிய ஆக்கிரமிப்பின்
காரணமாக ரஷ்யர்கள்
தேசப்பற்றுடன் ஒன்றிணைந்தது ஒரு
பக்கம் என்றால் இன்னொரு
பக்கம் பல
தளங்களில் அவர்கள்
பின்தங்கவும் நேரிட்டது.
ரஷ்யாவின் கலாசார வளர்ச்சி மங்கோலியர்களால்
முடங்கிப்போனது. கைவினைப்
பொருள்களைத் தயாரிக்கும் திறனைப்
பல ரஷ்யத் தொழிலாளர்கள்
இழந்துபோனார்கள். கட்டடக்கலை
தேக்கமடைந்தது.
மங்கோலியர்கள் ரஷ்யர்களின் வழிபாட்டு
உரிமைமீது அதிகம் தலையிடவில்லை.
எனவே கிறிஸ்தவத்தின்
வளர்ச்சி தடைபடவில்லை.
மாறாக, அதிகரிக்கவே
செய்தது. தேவாலயத்துக்கு
நேர்மையாக நடந்துகொண்டால்
மங்கோலியர்கள் போன்ற தீய
சக்திகள் ரஷ்யாவுக்குள்
நுழையாமல் இருக்கும்
என்று மக்களில் பலர்
நம்பினர். கீவ்
ரஷ்யாவைக் காட்டிலும்
மங்கோலியப் பிடியில்
இருந்த ரஷ்யாவில் இறை
நம்பிக்கை செழித்து
வளர்ந்தது.
ரஷ்ய சமூகம்
பிரிமிட் வடிவில்
இருந்தது என்கிறார்கள் அந்தக் காலகட்டத்தை
ஆய்வு செய்துள்ள
வரலாற்றாசிரியர்கள். உச்சியில்
கிராண்ட் பிரின்ஸ்
இருந்தார். அதிகாரம்
அவரிடம் அபரிமிதமாகக் குவிந்திருந்தது.
அவருடைய கட்டளைகளும்
வழிகாட்டுதல்களும்தான் சமூகத்தை
இயக்கிக்கொண்டிருந்தன. அவருக்குக்
கீழே முந்தைய
ஆட்சியாளர்களின் வாரிசுகள் அல்லது
இளவரசர்கள் (பிரின்ஸ்லிங்ஸ்)
இடம்பெற்றிருந்தனர். இவர்கள்
அவ்வப்போது தங்களுக்குக் கீழே
இருப்பவர்களுடனும் பல
சமயங்களில் தங்களுக்குள்ளும்
சண்டையிட்டு வந்தனர். யாருக்கு
அதிக அதிகாரம், யார் அதிக
செல்வாக்கு மிக்கவராக இருக்கவேண்டும்
போன்ற கேள்விகளை
எழுப்பி அவர்கள்
போட்டியிட்டுக்கொண்டனர். பரம்பரைச்
சொத்துகளுக்குப் பெரும்
அதிபதிகளாக இருந்தபோதிலும்
இவர்களுடைய அரசியல்
அதிகாரம் பெருமளவில்
கட்டுப்படுத்தப்படே இருந்தது.
இவர்கள் அனைவருமே
பேரரசருக்குக் கீழ்படிந்து
நடந்தாகவேண்டும். அவர்
பார்வையில் நாம் அனைவருமே
சமமான தகுதிகொண்டவர்கள்தாம் என்பது
அவர்களுக்கும் தெரியும்.
இந்த இளவரசர்களுக்குப்
பெரிய அரண்மனைகள்
இருந்தன. கணக்கற்ற
பணியாளர்களை அவர்கள்
நியமித்திருந்தனர். இந்தப்
பணியாளர்கள் ஒப்பந்த
அடிப்படையில் ஊதியம் பெற்றுவந்தனர்.
இவர்களில் பலர்
ஒப்பந்தங்கள் ஏதுமின்றி கிட்டத்தட்ட
அடிமைகளாக அரண்மனையோடு பிணைக்கப்பட்டிருந்தனர்.
இளவரசர்கள் கொடுத்த
பணத்தைப் பெற்றுக்கொண்டு
அதற்கு ஈடாக அவர்கள் தங்கள்
சுதந்தரத்தை அடமானம் வைத்திருந்தனர்.
இளவரசர்களுக்குக் கீழே
நிலப்பிரபுக்கள் இருந்தனர்.
இவர்கள் போயர்கள்
என்று அழைக்கப்பட்டனர்.
10 முதல்
12ம் நூற்றாண்டுவரை
கீவிய ரஷ்யாவில்
இவர்கள் செல்வாக்கு
மிக்கவர்களாக இருந்தனர்.
சிவில் நிர்வாகம்,
ராணுவம் என்று தொடங்கி
பல துறைகள்
இவர்கள் வசமிருந்தன. டூமா என்பது
அடிப்படையில் போயர்களின் கவுன்சிலே.
அரசர்களிடமிருந்து ஆணைகள்
பெற்று இயங்குவது மட்டுமல்ல, அரசருக்கு அறிவுரைகள்
கூறுவதும் இவர்கள் பணிதான்.
13 முதல்
14ம் நூற்றாண்டு வரை
போயர்கள் வடகிழக்குப்
பிரதேசங்களை நிர்வகித்துவந்தனர்.
ஆனால் 15ம்
நூற்றாண்டு தொடங்கி போயர்கள்
நிலப்பிரபுக்களாக மாறினர்.
ஒரு வர்க்கமாகவும்
திரண்ட போயர்கள்
அரசருடன் இணைந்து நாட்டை
ஆட்சி செய்துவந்தனர்.
பிரிமிட்டின் அடிப்பகுதியில்
மக்கள் இடம்பெற்றிருந்தனர்.
இவர்கள் இரு
பிரிவினராக இருந்தனர்.
முதலாவது பிரிவில்
வாழ்நாள் முழுவதையும்
ராணுவப் பணிகளுக்காக
அர்ப்பணித்தவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
பணியில் இருக்கும்வரை அவர்களுக்கு
நிலம் அளிக்கப்பட்டிருந்தது.
போரில் பங்கேற்பது மக்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
இளவரசர்கள், போயர்கள்
ஆகியோரும்கூட போரில்
கலந்துகொள்ளலாம். இரண்டாவது
பிரிவில் கிராமப்புற
விவசாயிகள், வணிகர்கள்,
கைவினைக் கலைஞர்கள் ஆகியோர்
இடம்பெற்றிருந்தனர்.
15, 16ம் நூற்றாண்டு
ரஷ்யாவில் இரு
விதமான விவசாய
உற்பத்திமுறை நிலவிவந்தது. முதலாவது நிலப்பிரபுக்களின்
பண்ணைகளில் நடைபெற்ற
விவசாயம். இங்கு
விவசாயக் கூலிகளும்
அடிமைகளும் உழைத்துவந்தனர்.
இரண்டாவது விவசாயிகள் தங்கள்
நிலங்களில் சிறிய
அளவில் செய்துவந்த
விவசாய உற்பத்தி.
இந்த இரண்டும்
தனித்தனியே இயங்காமல்
ஒன்றோடொன்று தொடர்ச்சியாக
மோதிக்கொண்டே இயங்கிவந்தன. நிலப்பிரபுக்கள்
விவசாயிகளின் தனி உற்பத்தியை விரும்பவில்லை.
ரஷ்யா மட்டுமல்ல,
கிழக்கு ஐரோப்பிய
நாடுகளிலும் இந்த
இரு பிரிவுகளுக்கிடையில்
மோதல்கள் நடைபெற்றுவந்தன.
இறுதியில் ரஷ்யாஉ ள்பட
இந்நாடுகள் அனைத்தும் இரண்டாவது
பிரிவினரை ஒதுக்கிவிட்டு
முதல் பிரிவினருக்கு
மட்டும் ஆதரவு கொடுத்தனர்.
16ம்
நூற்றாண்டு மத்தியில்
ரஷ்யாவின் மக்கள்
தொகை 90 லட்சமாக
உயர்ந்தது. இங்கிலாந்தின் அப்போதைய
மக்கள் தொகையைவிட இது
இரு மடங்கு
அதிகம். கிராமங்கள்,
நகரங்கள் வேறுபாடின்றி எல்லாவிடங்களிலும்
மக்கள் தொகை அதிகரித்தது
என்றாலும் மாஸ்கோவிலும்
அதையொட்டிய பகுதிகளிலும்
வளர்ச்சி துரிதமாக
இருந்தது. மக்கள்
தொகை அதிகரிப்போடு சேர்த்து
குடியேற்றங்களும் இந்தப்
பகுதிகளில் அதிகம் இருந்தன.
16ம் நூற்றாண்டின்
மிகப் பெரிய
ஐரோப்பிய நகரங்களில்
ஒன்றாக மாஸ்கோ திகழ்ந்தது. அதன்
மக்கள் தொகை
மட்டும் 2 லட்சம். மாஸ்கோவில்
பயணம் மேற்கொண்ட
ஆங்கிலேயப் பயணி
ரிச்சர்ட் சான்சிலர்,
லண்டன், அதன்
புறநகர் ஆகியவற்றைவிட
மாஸ்கோ பெரியதாக
இருந்தது என்று வியந்தார்.
மாஸ்கோ தொடங்கி யாரோஸ்லாவ்ல்
வரையிலான பிரதேசங்களில்
நிறைந்திருந்த சிறுசிறு
கிராமங்களைக்கண்டும் அவர்
ஆச்சரியமடைந்தார். இந்தக்
கிராமப்புற மக்களைச் சந்தித்தது
நிறைவான அனுபவம்
என்றும் நினைவுகூர்ந்தார்.
மாஸ்கோவுக்கு அடுத்த நோவ்கோரோட்
ஐரோப்பியர்களைக் கவர்ந்தது.
குறிப்பாக, அதன்
அகல நீளங்கள்.
ரோமைக் காட்டிலும்
நோவ்கோரோட் பெரியது
என்று பலர்
வியந்து குறித்து வைத்தனர்.
பிஸ்கோவ் என்னும் மற்றொரு
நகரத்தின் பிரமாண்டம்
பாரிஸுடன் ஒப்பிடப்பட்டது. ஒன்றுபட்ட அகண்ட ரஷ்யாவை அனைவரும் ஆச்சரியத்துடன்
பார்த்தனர். மங்கோலியர்களின் நீடித்த ஆதிக்கத்துக்கு உட்பட்ட பிறகும் எப்படி ரஷ்யாவால்
ஒற்றை பிரதேசமாக எழுச்சிபெறமுடிந்தது என்று அவர்கள் திகைத்தனர்.
16 ஜனவரி
1547 அன்று
நான்காம் இவான்
பொறுப்பேற்றுக்கொண்டார். ‘ஜார்
மன்னர்’ என்று
அழைக்கப்பட்ட முதல்
ரஷ்ய ஆட்சியாளர்
இவரே.

Comments
Post a Comment