மங்கோலியர்கள் : ஆக்கிரமிப்பு என்றால் என்ன?


ரஷ்யாவின் கதை / அத்தியாயம் 2

13ம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் நிகழ்ந்த மங்கோலியர்களின் படையெடுப்பு ரஷ்ய வரலாற்றில் ஒரு பெரிய கோட்டைக் கிழித்தது. அதற்குப் பிறகான ரஷ்யாவின் வரலாறு வேறு திசையில் செல்லத் தொடங்கியது. ரஷ்யாவுக்கு மட்டுமல்ல உலகுக்குமேகூட இது பொருந்தும். காரணம், மங்கோலியர்கள் ரஷ்யாவை மட்டுமல்ல, ஆசியா முழுவதையும் ஐரோப்பாவின் பெரும்பகுதியையும் சேர்த்தேதான் ஆக்கிரமித்தனர். கிழக்கு ஐரோப்பா தொடங்கி சீனா வரையிலான பெரும் நிலப்பிரதேசத்தை மங்கோலியர்கள் ஆளத் தொடங்கினர்.

நிலம், நிலம் என்று மங்கோலியர்கள் அலைந்து திரியத் தொடங்கியதற்குக் காரணம் அவர்களுடைய சமூக அமைப்பில் ஏற்பட்ட மாற்றம். உறவுமுறையாலும் வம்சாவழியிலும் இணைக்கப்பட்ட வெவ்வேறு குலங்கள் மங்கோலியாவில் வாழ்ந்துவந்தன. 12ம் நூற்றாண்டில் இந்த அமைப்புமுறை நிலப்பிரபுத்துவத்தின் ஆரம்பக் கட்டத்தை எட்டியபோது நிலத்துக்கான தேவை அதிகரித்தது. அதிகரித்துவந்த கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் தேவைப்பட்டது. எனவே, ராணுவத்தைக் கொண்டு அந்நிய நிலத்தை ஆக்கிரமிக்கவும் சொத்துகளைச் சூறையாடவும் தொடங்கினார்கள். செங்கிஸ் கான் இதில் ஒரு வலுவான முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

செங்கிஸ் கான் தனது மரணக் கட்டிலில் இருந்தபோது, அதாவது 1222 அல்லது 1223ம் ஆண்டு கல்கா நதிக்கருகே மங்கோலியர்களும் ரஷ்யர்களும் முதன்முதலில் சந்தித்துக்கொண்டனர். அதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து செங்கிஸ் கான் இறந்துபோனார். 1237ம் ஆண்டு ரஷ்யாவின் வட கிழக்கு பகுதிகள் மங்கோலியர்களின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துசேர்ந்தது. மூன்று ஆண்டுகளில் கீவ் நகரமும் கைப்பற்றப்பட்டது. அடுத்த இருநூறு ஆண்டுகளுக்கு ரஷ்யா மங்கோலியாவின் பிடியில்தான் இருந்தது.

மங்கோலியாவின் ஆக்கிரமிப்பு ரஷ்யாவுக்கு ஒரு புது குழப்பத்தை ஏற்படுத்தியது. கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டபிறகு ஐரோப்பிய நாடுகள் பலவற்றுடன் உறவு வளர்த்துக்கொண்டு ஐரோப்பிய மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்திருந்தது ரஷ்யா. இப்போது ஆசிய மங்கோலியா இழுக்கும் இழுப்புக்கும் ஈடுகொடுத்தாகவேண்டும் அல்லவா? எனில், நம் அடையாளம்தான் என்ன? ஐரோப்பா வழியில் செல்லவேண்டுமா அல்லது ஆசிய வழியிலா? இந்த விநோதமான கேள்விக்கு தனித்துவமான ஒரு விடையைத் தேடிக் கண்டடைந்தது ரஷ்யா. ஒரு ஐரோப்பிய நாடாகக் கிளை பரப்பி வளரவேண்டும். அதேசமயம், ஆசியாவில் கால்களை ஊன்றி நிற்கவேண்டும். இந்த முடிவு ரஷ்யாவின் எதிர்காலத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

ரஷ்யாவின் ஆட்சியாளர்கள் (அவர்கள் இளவரசர்கள் என்றே தொடக்கத்திலிருந்து அழைக்கப்பட்டுவந்தனர், மன்னர்கள் என்று அல்ல) இப்போது மங்கோலிய கான்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டியிருந்தது. அவர்களை அனுசரித்து, அவர்களைத் திருப்திபடுத்தி, அவர்களுடைய வழிகாட்டுதலை ஏற்று செயல்படவேண்டியிருந்தது. ரஷ்ய ராணுவம் இப்போது மங்கோலியர்கள் ஆதிக்கம் செலுத்தும் ராணுவமாக மாற்றியமைக்கப்பட்டது. இந்தப் பெருத்த அவமானத்தையும்கூட ரஷ்ய ஆட்சியாளர்கள் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. சில நகரங்களில் மங்கோலியர்களின் ஆதிக்கத்துக்கு எதிரான கலகங்களும் எதிர்ப்புகளும் முளைத்தன என்றாலும் குரூரத்துக்குப் பெயர்போன மங்கோலியர்கள் அவற்றை உடனுக்குடன் நசுக்கினர்.

செங்கிஸ் கானின் வழித்தோன்றல்கள் ரஷ்யாவை எப்படிக் கையாண்டனர் என்பது பற்றி இப்னு அல் ஆஸிர் என்னும் சமகால அராபியர் ஒருவரின் குறிப்பு இது. ‘உலகம் உருவானது தொடங்கி மனிதகுலம் இப்படியொரு பேரழிவை சந்தித்ததில்லை. உலகம் அழிந்துபோகும்வரை மீண்டுமொரு அழிவு இப்படி நிகழ்வதற்கு வாய்ப்பு இல்லை.’ மத்திய ஆசியா, தெற்கு காகசஸ் (தெற்கு காகசஸ் மலைப்பகுதிக்கு அருகில் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா எல்லைகளில் அமைந்திருந்த நிலப்பிரதேசம்) ஆகிய பகுதிகளில் வசித்துவந்த இனக்குழு மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது அப்புறப்படுத்தப்பட்டனர். மங்கோலிய இனக்குழு மக்கள் இந்த இடங்களைக் கைப்பற்றி விவசாயம் செய்யத் தொடங்கினர். தைமூரின் வரவு அச்சமூட்டக்கூடியதாக இருந்தது. மத்திய ஆசியா, இரான், தெற்கு காகசஸ், ஆசியா மைனர் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரு பெரிய பேரரசை தைமூர் நிறுவினார். 1370 முதல் 1405 வரை இந்தப் பேரரசு உயிர்த்திருந்தது.

‘தண்ணீரைப் போல் நம் தந்தைகள், சகோதரர்களின் குருதியை இந்தப் பூமி குடித்துத் தீர்த்தது. நம் சகோதரர்களும் குழந்தைகளும் சிறைபிடிக்கப்பட்டனர். நம் கிராமப்புறங்கள் பாலைவனங்களாக மாறின. நம் பெருமிதத்தை இழந்தோம். நம் அழகு குலைந்தது. நம் செல்வமும் உழைப்பும் கொள்ளையடிக்கப்பட்டன. நம் நிலம் அந்நியர்களிடம் சென்றுசேர்ந்தது’ என்று பெருஞ்சோகத்தைப் பகிர்ந்துகொள்கிறது 13ம் நூற்றாண்டு குறிப்பு ஒன்று. மக்களிடமிருந்து கட்டாய வரி வசூலிக்கப்பட்டதை எதிர்த்து குரல் கொடுத்த ஒரு பழங்குடி பாடல் இது.
உன்னிடம் பணம் இல்லையென்றால்
உன் குழந்தையைக் கேட்பார்கள்;
உன்னிடம் குழந்தைகள் இல்லையென்றால்,
உன் மனைவியை அபகரிப்பார்கள்;
உனக்கு மனைவி இல்லையென்றால்
நீதான் சென்றாகவேண்டும்.
காடுகள், நிலங்கள், கிராமங்கள், நகரங்கள் அனைத்தும் துயரத்தில் பிடியில் சிக்கியிருந்தன. அந்நிய ஆக்கிரமிப்பு என்றால் என்னவென்பதை ரஷ்யர்கள் பெரும் விலைகொடுத்து கற்றுக்கொண்டனர். எங்கெல்லாம் ரஷ்ய ஆட்சியாளர்கள் பலமிழக்கத் தொடங்கினார்களோ அங்கெல்லாம் அவர்களுடைய ஆட்சிக்கு உட்படிருந்த பிரதேசங்களும் பலமிழக்கத் தொடங்கின. அந்நியர்கள் கொடுத்த அழுத்தம்  போதாது என்பதுபோல் இந்த ஆட்சியாளர்களும்கூடத் தங்களுக்குள் மோதிக்கொள்ளத் தொடங்கினர். எடுத்துக்காட்டுக்கு, மிக்கெயில் யாரோஸ்லெவிச் என்பவர் விளாதிமிரைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததோடு ‘கிராண்ட் டியூக் ஆஃப் ரஷ்யா’ என்றும் தன்னை அறிவித்துக்கொண்டார். நோவ்கோரோட், கோஸ்ட்ரோமா, பெரெயாஸ்லாவ்ல் (இன்று உக்ரேன், ரஷ்யாவின் பகுதி) ஆகியவற்றையும் தன் ஆட்சியின்கீழ் கொண்டுவரும் முயற்சிகளை இவர் மேற்கொண்டார். ஆனால் இதற்கு மாஸ்கோவிடமிருந்து எதிர்ப்பு வந்தது.

மாஸ்கோ : எழுச்சியும் வளர்ச்சியும்

மாஸ்கோ குறித்த முதல் வரலாற்றுப் பதிவு 12ம் நூற்றாண்டில்தான் கிடைக்கிறது. குறிப்பாக, 1147ம் ஆண்டுதான் மாஸ்கோ முதல்முதலில் வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது விளாதிமிர் சுஸ்டால் எல்லைகளுக்கு மேற்கில் மாஸ்கோ அரவமற்று முடங்கிக் கிடந்தது. கீவ் வண்ணமிழந்துபோன நேரத்தில் மாஸ்கோ உறக்கம் கலைந்து எழுந்துகொண்டது.  வெகு விரைவில் அரசியல் முக்கியத்துவம் பெற்ற மையமாக மாஸ்கோ மாறிப்போனது.

சில காரணங்களைக் குறிப்பிடமுடியும். தனித்தனி ஆட்சியாளர்களின் பொறுப்பில் இருந்தாலும் ஒரு திரட்சியாக எடுத்துக்கொண்டால் ரஷ்யா என்னும் நிலப்பரப்பின் மையத்தில் மாஸ்கோ அமைந்திருந்தது. இதன் பொருள் ஒரே சமயத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் பாதுகாப்பான புகலிடமாகவும் மாஸ்கோவால் இருக்கமுடியும் என்பதுதான். சுற்றிலும் உள்ள பகுதிகளில் ஊடுருவல்களும் ஆக்கிரமிப்புகளும் நிகழ்ந்தாலும் மாஸ்கோவால் பாதுகாப்பாக இருக்கமுடியும். இதற்காகவே சுற்றுவட்டாரத்து பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலர் மங்கோலியர்களிடமிருந்து தப்பி மாஸ்கோவில் தஞ்சம் புகுந்தனர். தவிரவும், தெற்கு மேற்கு ரஷ்யாவையும் வடக்கு கிழக்கு ரஷ்யாவையும் இணைக்கும் சாலை போக்குவரத்தின் மையமாகவும் மாஸ்கோ திகழ்ந்தது. இதையே வருமானத்துக்கான ஒரு வழியாகவும் பயன்படுத்தி வரிகள் விதித்து செழிப்படைந்தது மாஸ்கோ.

மாஸ்கோவின் வளர்ச்சிக்கு மங்கோலியர்களும் ஒரு காரணம் என்னும் கூற்றையும் ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது. மங்கோலியர்களை அந்நியர்களாகக் கருதி எதிர்க்கவோ போராடவோ மாஸ்கோ துணியவில்லை என்பது மட்டுமல்ல, கூடியவரை கான் வம்சத்தினருக்கு அனுசரணையாக நடந்துகொள்ளவே மாஸ்கோ ஆட்சியாளர்கள் விரும்பினார்கள். வெகு விரைவில் நோவ்கோரோட், விளாதிமிர், சுஸ்டால் ஆகிய பிரதேசங்கள் அனைத்தையும் கடந்து ஓர் அதிகார மையமாகவும் மாஸ்கோ மாறிப்போனது. அத்தோடு நில்லாமல் பல பிரதேசங்களைத் தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவரும் முயற்சியிலும் வெற்றிபெற்றது. இதற்கு மங்கோலியர்களின் ஆதரவை நாடிப் பெற்றுக்கொண்டது மாஸ்கோ. இந்தக் கலையை ஓர் அரசியல் தந்திரம்போல் கற்றுத் தேர்ந்திருந்தது மாஸ்கோ. ஆனால் இந்தப் போக்கு நீண்டகாலம் நீடிக்கவில்லை. மங்கோலியாவோடு இணக்கமாக இருப்பதைவிட அதை எதிர்த்து அதனிடத்தைப் பிடித்துக்கொள்வதன்மூலம் கிடைக்கும் பலன்கள் அதிகம் என்பதை மாஸ்கோ உணர்ந்துகொண்டது. அந்நிய ஆட்சியை அனுமதிப்பதன்மூலம் அல்ல, அகற்றுவதன்மூலமே செல்வாக்கையும் பலத்தையும் அதிகரித்துக்கொள்ளமுடியும் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. மாஸ்கோ  தன் வழிமுறைகளை மாற்றிக்கொண்டது.

மூன்றாம் இவான்
இதற்கு மூன்றாம் இவான் ஒரு முக்கியமான காரணம். மாஸ்கோவின் ஆட்சியாளரான (கிராண்ட் பிரின்ஸ்) மூன்றாம் இவான் தன் தந்தை இரண்டாம் இவானுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர். ஏழு வயது சிறுவனாக இருந்தபோதே இரண்டாம் இவான் தன் மகனைத் தன்னுடைய அரசியல் விளையாட்டுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கிவிட்டார். திவேர் என்னும் அருகாமைப் பிரதேசத்து ஆட்சியாளரின் ஐந்து வயது மகள் மரியாவுடன் இவானுக்குத் திருமணமும் செய்துமுடித்துவிட்டார் அவர். ஆட்சியைப் பலப்படுத்துவதற்காக இந்த ஏற்பாடு. அப்பா எதிர்பார்த்தபடியே, ஆட்சிமுறை, அரசியல் இரண்டிலும் வெகு விரைவில் மகன் தேர்ச்சி பெற்றுவிட்டான்.

தொடக்கத்திலிருந்தே மாஸ்கோவை ஆட்சி செய்வது மட்டுமே மூன்றாம் இவானின் கனவாக இருக்கவில்லை. மாஸ்கோ ரஷ்யாவின் மையப்பகுதியில் அமைந்திருந்தால் மட்டும் போதாது, ரஷ்யாவின் இதயமாகவும் மாறவேண்டும் என்று அவர் விரும்பினார். பலமிக்க அகண்ட ரஷ்யாவைச் சாத்தியமாக்கவேண்டும் என்பதையே தனது லட்சியமாக அவர் வரித்துக்கொண்டார். இந்த லட்சியத்துக்கு மங்கோலியர்கள் வெளிப்புற எதிரிகள் என்றால் உள்ளுக்குள்ளே போட்டியிட்டுக்கொண்டும் சண்டையிழுத்துக்கொண்டும் இருக்கும் மற்ற ரஷ்ய ஆட்சியாளர்கள் உள்புற எதிரிகள் என்பதை அவர் விரைவில் இனம் கண்டுகொண்டார்.

கண்டிப்புக்கும் ஒழுக்கத்துக்கும் பெயர் போனவராக இருந்தார் மூன்றாம் இவான். தன் சகோதரர்களும் மற்ற அதிகாரிகளும் கேள்வியின்றி தன் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். தன்னுடைய மூத்த மகனுக்கு இளைய மகன்கள் அனைவரும் கீழ்படிந்து நடக்குமாறு சிறு வயதிலிருந்தே பார்த்துக்கொண்டார். நிர்வாகத்திலும் ஆட்சிமுறையிலும் பல அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவந்தார். தன்னுடைய அதிகாரம் முந்தைய ஆட்சியாளர்களைக் காட்டிலும்  அதிகம் இருக்கும்படி பார்த்துக்கொண்டார். மாஸ்கோ மட்டுமல்ல ரஷ்யாவுமேகூட ஒரு புதிய பாணி நிலப்பிரபுத்துவ ஆட்சிமுறைக்குத் தயாரானது.

மூன்றாம் இவானை ரஷ்யா எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டது என்பது இதன் பொருளல்ல. மாஸ்கோவின் பலம் கூடிக்கொண்டே போனதை இயல்பாகவே பக்கத்து பிரதேசங்கள் விரும்பவில்லை. உதாரணத்துக்கு, நோவ்கோரோட் மாஸ்கோவை வெளிப்படையாக எதிர்த்தது. இந்தப் பகுதி எப்போதுமே பிரச்னைக்குரிய இடமாகவே இருந்து வந்ததை உணர்ந்த மூன்றாம் இவான் தன் கவனத்தை நோவ்கோரோட் பக்கம் திருப்பி விரைவில் அதனைத் தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தார். தன் பலத்தையும் செல்வாக்கையும் அவர் இதற்குப் பயன்படுத்தினார். 1478ம் ஆண்டு மாஸ்கோவைத் தன்னிகரற்ற தனி அதிகார மையமாக நோவ்கோரோட் ஏற்றுக்கொண்டது. எந்த அளவுக்கு என்றால், இனி எங்களுக்குத் தனி ஆட்சியாளரே வேண்டாம், மாஸ்கோ சொல்வதையே செய்வோம் என்று அறிவித்துவிட்டது நோவ்கோரோட். இந்த  வெற்றி  இவானுக்குப் பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கவேண்டும். முன்பு கீவ் வகித்த இடத்தை மாஸ்கோ பிடித்துக்கொண்டதை ரஷ்யா மெல்ல மெல்ல உணரத் தொடங்கியது.

Golden Horde என்பது மங்கோலியர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த ரஷ்ய பகுதிகளைக் குறிக்கிறது.
 ரஷ்யா மட்டுமல்ல ஐரோப்பாவுக்கும் இந்த உண்மை வெளிப்பட ஆரம்பித்தது. மூன்றாம் இவானின் ரஷ்யா முன்பிருந்த ரஷ்யாவிடமிருந்து பெருமளவில் மாறுபட்டிருந்ததையும் மிகப் பெரிய அளவில் அதன் பலம் கூடியிருந்ததையும் ஐரோப்பா கண்கூடாகக் கண்டது. 15ம் நூற்றாண்டு முடிவில் ஐரோப்பாவும் பல மாற்றங்களை எதிர்கொள்ள ஆரம்பித்திருந்தது. புவியியல் சார்ந்த பல கண்டுபிடிப்புகள் உலகம் குறித்த ஐரோப்பாபின் பார்வையை மாற்றியமைத்துக் கொண்டிருந்தது. ஒரு வலுவாக சித்தாந்தமாக முதலாளித்துவம் திரண்டு உருபெற்றுக்கொண்டிருந்தது. முடியாட்சிமுறை பலமிக்கதாக உருவாகியிருந்தது. இந்த மாற்றங்களை மூன்றாம் இவானின் ரஷ்யாவும் கவனித்துக்கொண்டுதான் இருந்தது என்றாலும் அவற்றின் பலன்களெல்லாம் அதற்குக் கிடைத்தது என்று சொல்லமுடியாது.

15ம் நூற்றாண்டின் முடிவில் ஐரோப்பாவின் சக்திவாய்ந்த ஓர் அரசாக ரஷ்யா திகழ்ந்தது. அதன் நிலப்பரப்பு பிரமிப்பூட்டும் வகையில் வளர்ந்திருந்து. பல்வேறு தனித்தனி பிரதேசங்களாக (இவற்றை பிரின்ஸிபாலிடிஸ் என்று அழைத்தனர்) இருந்தவை அனைத்தும் இப்போது மாஸ்கோவின் தலைமையை ஏற்று ரஷ்யா என்னும் ஒற்றை தேசமாகத் திரண்டுகொண்டிருந்தன. அகண்ட ரஷ்யா. மக்களும்கூடத் தங்களை நோவ்கோரோட்வாசிகள், கீவ்சாசிகள், ஸ்மோல்னிஸ்க்வாசிகள் என்றெல்லாம் அல்லாமல் ரஷ்யர்கள் என்று தங்களை உணர ஆரம்பித்தனர். இப்படி நாடும் மக்களும் ஒன்றுதிரண்டு வந்ததற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று மங்கோலியர்களின் படையெடுப்பு என்பதையும் குறிப்பிட்டுதான் ஆகவேண்டும். மங்கோலியர்களின் பேரழிப்புப் படையெடுப்புதான் ரஷ்யப் பிரதேசங்களுக்கு இடையில் அழுத்தமான பிணைப்பை ஏற்படுத்தியது. ரஷ்யர்களுக்கு இடையில் ஓர் உறவுச் சங்கிலியையும் உருவாக்கி அவர்களை ஒருங்கிணைத்தது.

மூன்றாம் இவானின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு என்று இதைச் சொல்லமுடியும். அந்நிய ஆக்கிரமிப்பிலும் பல்வேறு உள்நாட்டுக் குழப்பங்களிலும் தத்தளித்துக்கொண்டிருந்த ரஷ்யாவை ஒரு பலமிக்க அரசாகக் கட்டமைத்தார் அவர். இப்போது அவர் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். ரஷ்யாவை மங்கோலியர்களின் பிடியிலிருந்து முழுக்க விடுவிக்கவேண்டும். தனது பலத்தையெல்லாம் அதற்காகத்தான் திரட்டிக்கொண்டிருந்தார் அவர்.

Comments