ரஷ்யாவின் கதை / அத்தியாயம் 1
பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்று 225 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இருந்தும் அந்நிகழ்வு ஒரு சர்ச்சைக்குரிய விவாதப் பொருளாகவே நீடிக்கிறது. நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் அதன் வரலாறு திரும்பத் திரும்பப் பல்வேறு கோணங்களிலிருந்து பலரால் சொல்லப்படுகிறதே தவிர திட்டவட்டமான முழுமையான ஒரு மதிப்பீடு இன்னமும் வரலாற்றாசிரியர்கள் மத்தியில் உருவாகிவிடவில்லை. பிரெஞ்சுப் புரட்சியை இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு நினைவுகூர்ந்த அந்நாட்டு வரலாற்றாசிரியர்கள் அதை மிகவும் கடுமையான மொழிகொண்டு சாடியதை எரிக் ஹாப்ஸ்பாம் சுட்டிக்காட்டுகிறார். பிரெஞ்சுப் புரட்சியோடு ஒப்பிடும்போது நூறு ஆண்டுகள் மட்டுமே ஆகியிருக்கும் ரஷ்யப் புரட்சியை ரஷ்யர்களும் ரஷ்யாவுக்கு வெளியில் இருப்பவர்களும் நடுநிலையுடன் மதிப்பிடுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாதுதான். தவிரவும், ஹாப்ஸ்பாம் குறிப்பிடுவதைப்போல் 1917ம் ஆண்டை வைத்து மட்டுமல்ல, சோவியத் யூனியன் சிதறிய 1991ம் ஆண்டை வைத்தே பலரும் ரஷ்யப் புரட்சியையும் அதன் தாக்கத்தையும் மதிப்பிட விரும்புகிறார்கள். ரஷ்யப் புரட்சி குறித்து நிலவும் கருத்து வேற்றுமைகளுக்கு அதுவும் ஒரு காரணம்.
1917 குறித்து வெளிவந்திருக்கும் நூல்களை இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கமுடியும் என்கிறார் ஹாப்ஸ்பாம். ‘உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அது நடந்தே தீரவேண்டிய ஒன்று’ என்பது முதல் வகை. ‘பிழைகளும் விபத்துகளும் மலிந்திருப்பதால் அது நடந்திருக்கவே கூடாது’ என்பது இரண்டாவது வகை. ரஷ்யப் புரட்சி நடந்திருக்கவேண்டுமா, நடந்திருக்கக்கூடாதா என்னும் கேள்வியை எழுப்பி இந்த இரு வகை ஆய்வுகளும் பதிலளிக்கின்றன. ஆனால் ரஷ்யப் புரட்சியை இந்த ஒரு கேள்வியை மட்டும் கொண்டு அணுகினால் சரி, தவறு என்னும் மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட பதில் மட்டுமே நமக்குக் கிடைக்கும். மாறாக, ஹாப்ஸ்பாம் சொல்வதைப் போல் ரஷ்யப் புரட்சியைப் புரிந்துகொள்வதே நம் முதன்மையான நோக்கமாக இருக்கவேண்டும். வரலாறு நம்மிடமிருந்து தீர்ப்புகளை அல்ல, நல்ல புரிதலையே எதிர்பார்க்கிறது. இதுவே கடினமானதும்கூட.
பண்டைய ரஷ்யா
ரஷ்யா என்பது ஒரு நாடல்ல அது ஓர் உலகம் என்பது விவசாயிகள் மத்தியில் நிலவிவந்த ரஷ்யப் பழமொழிகளில் ஒன்று. இந்த உலகத்தை நம்மைப்போன்ற அந்நியர்களால் அத்தனை சுலபத்தில் புரிந்துகொண்டுவிடமுடியாது. ரஷ்யாவின் திகைக்கவைக்கும் புவியியல் பரப்பு, மொழிகள், கலாசாரங்கள், மதங்கள், பண்பாடுகள், இலக்கியம், வானிலை, அரசியல், சமூக அமைப்பு, வரலாறு, பொருளாதாரக் கட்டுமானம் ஆகியவற்றை ஆராய முற்படுவதேகூட மிகப் பெரிய சவால்தான்.
ரஷ்யப் புரட்சி குறித்த நூல்கள் பொதுவாக ஜார் ஆட்சியிலிருந்தே தொடங்குவது வாடிக்கை . இந்த வழக்கத்திலிருந்து சற்றே மாறுபட்டு, பண்டைய ரஷ்யாவிலிருந்து நம் பயணத்தைத் தொடங்குவோம். ஒரு சுருக்கமான, மிக எளிமையான அறிமுகத்துடன் ஜார் ஆட்சியை நெருங்குவது பலனளிக்கக்கூடியதாக இருக்கும்.
பண்டைய ரஷ்யாவை உருவாக்கியவர்கள் ஸ்லாவிய இனக்குழு மக்கள். இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஸ்லாவிய இனத்தவர் மத்திய ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா, தென்கிழக்கு ஐரோப்பா, வடக்கு ஆசியா, மத்திய ஆசியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். 6ம் நூற்றாண்டு தொடங்கி மத்திய, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் இவர்கள் அதிகம் குடியேறத் தொடங்கினர். ஐரோப்பாவின் மிகப் பெரிய இனக்குழு இவர்கள்தாம். ஸ்லாவிய மக்களை இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கமுடியும். தெற்கு ஸ்லாவியக் குழு, வடக்கு ஸ்லாவியக் குழு. இந்த இருவரையும் கொண்ட தொகுப்பே பண்டைய ரஷ்யாவாக இருந்தது.
ஸ்லாவிய இனக்குழு மக்கள் வராங்கியர்கள் என்று அழைக்கப்பட்ட அந்நியர்களால் 9ம் நூற்றாண்டில் தோற்கடிக்கப்பட்டனர். ஸ்கான்டினேவியாவைச் சேர்ந்த இந்த வராங்கியர்கள் ஸ்லாவிய இனத்தவர்மீதும் இதர இனக்குழுக்கள்மீதும் இழைத்த கொடுமைகள் பண்டைய ரஷ்யப் பதிவுகளில் காணக்கிடைக்கின்றன. தற்சமயம் உக்ரேனின் தலைநகராக இருக்கும் கீவ், 9 முதல் 11ம் நூற்றாண்டுவரை வராங்கியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களுடைய தலைவரான ஓலெக் என்பவர்தான் கீவை ரஷ்யாவின் முதல் நகரமாகக் கட்டமைத்தார் என்று சொல்லப்படுகிறது. ஓலெகுக்குப் பிறகு அவருடைய வழித்தோன்றல்கள் கீவை ஆண்டுவந்தனர்.
ரஷ்யாவை உருவாக்கியவர்கள் வராங்கியர்களே என்று பல மேற்கத்திய வரலாற்றாசிரியர்களும், இல்லை ஸ்லாவிய இனத்தவரே ரஷ்யாவை உருவாக்கியர்கள் என்று சோவியத் வரலாற்றாசிரியர்களும் வாதிடுகின்றனர். வராங்கியர்களை முதன்மைப்படுத்துபவர்கள் ஸ்லாவிய மக்கள் காட்டுமிராண்டிகளாக, பண்பாடு அற்றவர்களாக இருந்தனர் என்றும் அந்நியர்கள் வந்தபிறகே அவர்கள் நாகரிகமடைந்தனர் என்றும் சொல்வது வழக்கம். ஆனால் சோவியத் ஆசிரியர்களோ, அந்நியர்களின் வருகைக்கு முன்பே ஸ்லாவிய மக்கள் ரஷ்யாவின் அடித்தளத்தைப் பலமாக அமைத்துவிட்டனர் என்று உறுதிபடச் சொல்கின்றனர். அந்நிய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த இத்தகைய புனைவுகள் கையாளப்படுவது இயற்கையே என்பது அவர்கள் தர்க்கம்.
பண்டைய ரஷ்யாவின் ஒவ்வொரு பிரதேசமும் தனித்தனி ஆட்சியாளர்களால் ஆளப்பட்டுவந்தது. ஆனால் எல்லோரையும்விட கீவ் பேரரசர் உயர்ந்தவராக இருந்தார். 10ம் நூற்றாண்டு வாக்கில் கிட்டத்தட்ட ரஷ்யக் கூட்டமைப்பு போல் ஒன்று உருவாகிவிட்டது. அதன் அறிவிக்கப்படாத அதிகார மையமாக கீவ் திகழ்ந்தது. கீவ் பேரரசரின் (கிராண்ட் பிரின்ஸ் என்று இவர் அழைக்கப்பட்டார்) தலைமையை மற்ற ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொரு ஆட்சியாளரும் தன்னுடைய அதிகாரத்துக்கு உட்பட்டிருந்த ஆட்சியை நிர்வாகம் செய்துவந்தார். எல்லையைக்
காக்கும் பணியும் அவருடையதுதான். நாளடைவில் பைசாண்டியம், பாரசீகம் போன்ற இடங்களையும் கீவ் ஆட்சியாளர்கள் கைப்பற்றினார்கள்.
இந்தக் காலகட்டத்தில் ரஷ்யர்கள் வெவ்வேறு கடவுள்களை வழிபட்டு வந்தனர். ஆனால் இந்தப் பன்முக வழிபாடு விரைவில் அழிவைச் சந்தித்தது. கீவின் பேரரசரான மகா விளாதிமிர் அப்போது பரவலாகயிருந்த கிழக்கத்திய பழங்கால கிறிஸ்தவ மதத்தைத் தழுவிக்கொண்டார். இது நடந்தது 10ம் நூற்றாண்டின் தொடக்கத்தில். இந்த முடிவு ரஷ்யாவின் அரசியலையும் அதன் சமூகத்தையும் பெருமளவில் பாதித்தது. தனது மதத்தையே அரசு மதமாக அறிவித்தார் விளாதிமிர். ரஷ்ய மக்கள் அனைவரும் அதுவரை தாங்கள் பின்பற்றிய வழிபாட்டு முறைகளைக் கைவிட்டுவிட்டு கிறிஸ்தவத்தைத் தழுவிக்கொள்ளவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இயற்கையைப் பிரதிபலிக்கும் பல்வேறு கடவுள் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டன. உடைக்கப்பட்ட துண்டுகள் தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டன. ஏழை, பணக்காரன் வேறுபாடின்றி ஒவ்வொருவரும் விளாதிமிரின் கட்டளைக்குக் கீழ்படியவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இடிக்கப்பட்ட பழைய வழிபாட்டு இடங்களில் தேவாலயங்கள் கட்டப்பட்டன. பாதிரியார்கள் உடனடியாக எல்லா இடங்களிலும் பணியமர்த்தப்பட்டனர். திரண்டுவந்த மக்களை மதமாற்றம் செய்து கிறிஸ்தவர்களாக மாற்றவேண்டியது அவர்கள் பொறுப்பு.
கிறிஸ்தவ ரஷ்யாவால் இப்போது அண்டை நாடுகளுடனான உறவைப் பலப்படுத்திக்கொள்ளமுடிந்தது. பைசாண்டியம், பல்கேரியா ஆகிய நாடுகள் ரஷ்யாவோடு நெருக்கமானதைத் தொடர்ந்து அந்நாடுகளின் தாக்கம் ரஷ்யாவிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. பைசாண்டியக் கட்டடக் கலை ரஷ்யாவில் செழித்தது. பல்கேரியர்கள் ஸ்லாவிக் எழுத்துருக்களை ரஷ்யர்களுக்கு அறிமுகம் செய்தனர். சிரில் என்னும் பைசாண்டியப் பாதிரியாரின் பெயர் கொண்ட சிரிலிக் எழுத்துரு இன்றும் ரஷ்ய நாடுகளில் பின்பற்றப்படுகிறது.
ஸ்லாவிய ரஷ்யா இப்போது புதிய கீவிய ரஷ்யாவாக உருமாறியிருந்தது. ஆனால் இந்த மாற்றம் அதிக காலம் நீடிக்கவில்லை. 1015ல் விளாதிமிர் இறந்துபோனார். அவருக்குப் பிறகு வந்தவர்கள் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் கீவை ஆண்டுவந்தனர் என்றாலும் குழப்பங்களோ சிக்கல்களோ இன்றி ஆண்டு வந்தனர் என்று சொல்லமுடியாது. சுற்றுவட்டாரத்துப் பிரதேச ஆட்சியாளர்கள் கீவ் பேரரசரின் அதிகாரத்தை ஏற்க மறுத்தனர். போட்டியிடவும் முரண்படவும் வெளிப்படையாக கீவின் அதிகாரத்தை எதிர்க்கவும் தொடங்கினர். இதுபோக வேறு பல காரணங்களாலும் கீவிய ரஷ்யா படிப்படியாகப் பலவீனமடைந்தது.
சோவியத் வரலாற்றாசிரியர்களைப் பொருத்தவரை விளாதிமிர் காகலட்டத்தோடு பண்டைய ரஷ்யாவின் முதல் பாகம் முடிவடைகிறது. கிறிஸ்தவத்தின் வரவுக்குப் பிறகு பலமிக்க ஓர் அமைப்பாக தேவாலயம் மாறியதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். வெறும் வழிபாட்டு இடமாக மட்டுமின்றி, அப்போது நிலவிய சமூக அமைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் பணியையும் தேவாலயம் மேற்கொண்டது. அனைவரையும் கிறிஸ்தவர்களாக மாற்றியதன்மூலம் மக்களை மதம் என்னும் ஒரு குடையின்கீழ் திரளச் செய்வதில் விளாதிமிர் வெற்றிபெற்றார். அரசின் அதிகாரபூர்வமான சித்தாந்தமாக கிறிஸ்தவம் உயர்த்தப்பட்டது. அதுவே மக்களின் சித்தாந்தமாகவும் மாற்றப்பட்டது.
கீவிய ரஷ்யா நிலவுடைமைச் சமூகமாக இருந்தது. ஆட்சியாளர்களும் செல்வந்தர்களும் நிலவுடைமையாளர்களும் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தனர். இந்த அதிகாரத்தைப் பின்னர் பாதிரிகளும் பங்குபோட்டுக்கொண்டனர். அடிமைமுறை அமலில் இருந்த காலகட்டம் அது. மக்கள் தொகையில் பெரும்பான்மையினர், விவசாயிகள். இவர்களில் ஒரு பிரிவினரிடம் நிலம், உற்பத்திக் கருவிகள் ஆகியவை இருந்தன. இன்னொரு பிரிவினரிடம் இவையெதுவும் இல்லை என்பதால் அவர்கள் நிலவுடைமையாளர்களைச் சார்ந்து அவர்களுடைய அடிமைகளாக இருந்தனர். செல்வாக்கு மிக்கவர்களிடம் ஏதுமற்றவர்கள் அடங்கி நடந்தனர். நிலவுடைமையாளர்களிடம் நிலமற்ற விவசாயிகள் கீழ்ப்படிந்தனர். அதேபோல் கீவ் நகருக்கு மற்ற நகரங்கள் அடங்கி நடந்தன. ஆனால் இந்த உறவுமுறை கீவ் பலவீனமடைந்ததும் சிதறத் தொடங்கியது. எடுத்துக்காட்டாக, கீவுக்குக் கட்டுப்படமாட்டோம், நாங்கள் சுதந்தரமாக இருக்கவிரும்புகிறோம் என்று அறிவித்தது நோவ்கோரோட் என்னும் பிரதேசம்.
மேலும் பல எதிர்க்குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. ஆட்சியாளர்களுக்கிடையிலான அதிகாரப் போட்டி மட்டுமின்றி நிலவுடைமைக்கு எதிரான மக்கள் எதிர்ப்புகளையும் காணமுடிந்தது. சுஸ்டால் என்னும் பகுதியில் 1024ம் ஆண்டு அத்தகைய எதிர்ப்பு விவசாயிகளிடமிருந்து கிளம்பிவந்தது. இதைவிடவும் முக்கியமாக, 1068ம் ஆண்டு கீவ் நகரில் நகர்ப்புற அடித்தட்டு மக்கள் பெரும் எண்ணிக்கையில் கிளர்ந்தெழுந்தனர். கீவ் நகர கவர்னரின் அவையை நோக்கிப் படையெடுத்துச் சென்ற மக்கள் கூட்டம் அந்த அவையை அடித்து நொறுக்கியது. கீவ் பேரரசர் இஸியாஸ்லாவ் போலந்துக்குத் தப்பிச்செல்ல வேண்டியிருந்தது. அதேபோல் 1071 வாக்கில் பெலோஸிரோ என்னுமிடத்தில் விவசாயிகள் அதிகளவில் திரண்டு ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாகவும் இடைவெளிவிட்டும் இத்தகைய போராட்டங்கள் பலவிடங்களில் வெடித்துக்கொண்டிருந்தன. கீவ் ரஷ்யாவின் செல்வாக்கு வேகவேகமாகச் சரிந்துகொண்டிருந்தது.
இதுவரையிலான ரஷ்யாவின் வரலாற்றை மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் சோவியத் வரலாற்றாசிரியர்கள், எந்தவகையிலும் ரஷ்யா மற்ற நாடுகளைவிடப் பின்தங்கியிருக்கவில்லை என்னும் முடிவுக்கு வந்துசேர்கின்றனர். இத்தாலி, பைசாண்டியம் ஆகிய பழங்கால நாடுகளைத் தவிர்த்துப் பார்த்தால் ரஷ்யாவின் கலாசாரம் உயர்தரமானதாகவே இருந்தது என்கிறார்கள் அவர்கள். ஸ்லாவிய ரஷ்யா பைசாண்டியம், பல்கேரியா, ஹங்கேரி, பொஹிமியா, போலந்து, ஜெர்மனி, ஸ்கான்டினேவியா, கஸார் பேரரசு, காகசஸ் என்று பல நாடுகளின் கலாசாரங்களோடு தொடர்பு வைத்திருந்தது. கீவ் ரஷ்யாவும் மொழி, மதம், கட்டடக்கலை என்று தொடங்கி பல துறைகளில் முன்னேற்றம் கண்டிருந்தது.
பல்கேரியா, பைசாண்டியம் தாக்கத்தில் மத இலக்கியமும் ரஷ்யாவில் வளரத் தொடங்கியது. வர்த்தகக் கணக்குகள், பரிவர்த்தனைகள் ஆகியவற்றைப் பதிவு செய்தால் போதாது; வரலாற்றையும் பதிவு செய்யவேண்டும் என்னும் புரிதல் ஏற்பட்டது. 11ம் நூற்றாண்டு தொடக்கத்தில் கீவ், நோவ்கோரோட் ஆகிய பகுதிகளிலிருந்து வரலாற்றுப் பதிவுகள் வெளிவரத் தொடங்கின.சிலர், பத்தாம் நூற்றாண்டிலேயே இந்த முயற்சி தொடங்கப்பட்டதாகச் சொல்கின்றனர். கடந்த காலம் மட்டுமின்றி, சமகாலத்தையும் எழுத்தில் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இலக்கியமும் செழிப்புடன் வளரத் தொடங்கியது. தொடக்கத்தில் கீவ், நோவ்கோரோட் ஆகிய நகரங்களில் மட்டும் அதுவும் உயர்க்குடிகளும் செல்வந்தர்களும் மட்டுமே இலக்கியம் படைத்துக்கொண்டிருந்தனர். இதிலும் மாற்றம் ஏற்பட்டு, சிறிய நகரங்களும் கிராமப்புறங்களும்கூட எழுத்தாளர்களை உருவாக்க ஆரம்பித்தன. ஆட்சியாளர்கள், உயர்குடிகள், பாதிரியார்கள், பிஷப்புகள் என்று பலரும் எழுதத் தொடங்கினர். இந்தப் படைப்புகள் பல அழிந்துவிட்டன என்றாலும் ஆயிரக்கணக்கானவை இன்னமும் எஞ்சியிருக்கின்றன. ஆட்சியாளர்களின்
வரலாறு, போர்கள், தேவாலயங்கள் இயங்கும் முறை, பிரார்த்தனைகள், மத விளக்கங்கள் ஆகியவை நடந்தது நடந்தபடியும் சில சமயம் கற்பனை கலந்தும் எழுதிவைக்கப்பட்டன. 11, 12ம் நூற்றாண்டுகளில், பல அயல்மொழிப் படைப்புகளும் மொழியாக்கம் செய்யப்பட்டன.
கல்வித் துறையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்பட்டன. 11ம் நூற்றாண்டு கீவ் பாடசாலைகளின் கல்வித் தரத்தை அப்போதைய மேற்கு ஐரோப்பிய கல்வித் தரத்தோடு ஒப்பிடமுடியும் என்கிறார்கள் சோவியத் வரலாற்றாசிரியர்கள். பிரத்தியேகக் கடிதங்கள், தனிப்பட்ட குறிப்புகள், கணக்கு வழக்குகள், உயில்கள், பாடசாலைக் குறிப்புகள் ஆகியவற்றை ஆராயும்போது உயர்குடி மக்கள் மட்டுமின்றி சாமானிய மக்களும் பெருமளவில் படிப்பறிவு கொண்டவர்களாக இருந்தது தெரியவருகிறது. கீவிய ரஷ்யாவின் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாக நோவ்கோரோட், விளாதிமிர், செர்னிகோவ், ஸ்மோலென்ஸ்க் ஆகிய பண்டைய ரஷ்ய நகரங்கள் திகழ்கின்றன. தேவாலயங்கள், பாலங்கள், அரண்மனைகள் என்று பல கட்டுமானங்கள் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டன. அழகு மிளிரும் ஓவியங்களும் இந்தக் காலகட்டத்தில் தீட்டப்பட்டன.
அரசமைப்பு தளர்ந்துகொண்டே வந்தபோதும் வேறு பல துறைகளில் கீவிய ரஷ்யா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை நிகழ்த்தியிருந்தது. இந்தப் பின்னணியில்தான் பலவீனமான ரஷ்யாமீது பலமிக்க மங்கோலியர்கள் படையெடுத்து வந்தனர்.


இவ்வரலாற்றை படிக்கும்போதே வாழ தவறிவிட்டோம் என்றே ஏக்கம் எழுகிறது !
ReplyDeleteபா.ராகவன் அவர்களின் அறிமுகம் மூலம் உங்கள் பக்கம் வந்தேன். மிக அருமையான நடை, நன்றி மேலும் எழுதுங்கள்.
ReplyDeleteAm also coming from Pa.Raghavan fb page. Well written !...
ReplyDeleteபா ரா அவர்கள் மூலம் இத்தளம் வந்தேன். எனது மகள் தற்சமயம் கீழ் நகரத்தில் மருத்துவம் பயின்று வருகிறார். அதன் வரலாறு படித்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி
ReplyDelete